
posted 10th January 2023
பாடசாலை கல்வியுடன் நூலக பழக்கத்தையும் மாணவர்கள் பின்பற்றுவார்களானால் சமூகத்தில் சிறந்த பிரைஜையாக உருவாக முடியும் என்பதுடன் தான் வாழும் பிரதேசத்தையும் வழமானதாக்க முடியும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாகப் பொறுப்பாளரும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினருமான அனுசியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேசத்துக்கான நூலக தினம் இன்றைய தினம் வேலணை பிரதேச சபையின் தேவா கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
தற்போது மாணவர்கள் மத்தியில் நூலகம் சென்று வாசிக்கும் பக்குவம் மிகவும் அரிதாகிவிட்டது. இதற்கு நவீன தொழில் நூட்பங்களின் வருகையும் அதனுடன் இணைந்த சமூக ஊடகங்களும் காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக வாளினுடைய கூர்மையும் நூலினுடைய கூர்மையுமே ஒரு நாட்டை ஆளும்” என்று கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் நூலினுடைய கூர்மைதான் உலகத்தையே ஆழ்கிறது என்றால் அது மிகையல்ல.
மனிதனை புரிதலுள்ளவனாகவும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊட்டி மனிதனாக்குவதும் இந்த கல்வியும் அதனோடிணைந்த வாசிப்பும் தான்.
அதனால் தான் “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என ஒளவையார் நாலடியார் எனும் நூலில் பாடிச்சென்றுள்ளார்.
சிறந்த புத்தகங்களை வாசிப்பதனால் மனிதனது சிந்தனை திறன் அதிகரிக்கும். ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு வழிவகுக்கும். ஒர் இனத்தவரின் உணர்வுகளை இன்னொரு இனத்தவர் புரிந்து கொள்வதற்கும் இன நல்லிணக்கத்தை உருவாக்கவும் அடிப்படை காரணமாகவும் அமைகின்றது.
அதாவது மண்ணை எவ்வளவு ஆழமாக தோண்டினால் நீரானது கிடைப்பதனை போல நல்ல நூல்களை கற்பதனால் மனிதர்களுக்கு நல்லறிவானது தோன்றும் என்பதை,
“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தற்கு குற்றனைதூறும் அறிவு”
என்கிறார் பொய்யாமொழி புலவர் வள்ளுவர் கூறியுள்ளார்.
இவ்வாறு வாசிப்பு ஒரு மனிதனின் மட்டுமல்லது. ஒரு இனத்தின் இருப்பு இன்னொரு இனத்துடனான நல்லுறவு போன்றவற்றை மாற்றிவிடும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது.
வாசிப்பு ஒரு மனிதனுக்கு பல்வேறான அனுபவங்களை கற்று தரவல்லது “ஒரு நல்ல நூலானது பல நல்ல நண்பர்களுக்கு ஒப்பானது” என்று கூறுவார்கள்.
வாசிப்பதனால் மனிதன் பூரணம் அடைகிறான் என்று கூறுவார்கள். ஆனால் நான் அதையும் தாண்டி இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் அது உருவாக்கும் என்று கூறுகின்றேன்.
வாசிப்பு எமக்கு அறிவினை மாத்திரமன்றி பிறருடைய மன உணர்வுகளையும் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களையும், பொறுமை, மன ஒருநிலைப்பாடு, சஞ்சலமற்ற மனநிலையையும் எமக்கு சொல்லித் தருகிறது.
வாசிப்பு மக்களிடையே காணப்படும் இடைவெளியை குறைத்து நல்லிணக்கத்தை உருவாக்குகின்றது.
ஆனால் எமது சமூகத்திடமும் மாணவர்களிடத்திலும் வாசிப்பின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
மக்களிடையேயான புரிதலின்மைக்கு மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைவதற்கும் வாசிப்பு திறன் குறைவடைவதே காரணமாகும்.
இன்றைய சமுதாயம் அதிகம் சமூக வலைத்தளங்களை பாவிப்பதன் காரணமாக நூலகங்களையும் வாசிப்பு பழக்க வழக்கங்களையும் மறந்துவிட்டனர் எனலாம்.
எனவே, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் புத்தகங்கள் என்றைக்கும் எமது உற்ற நண்பனாய் பெற்றுத்தரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)