நினைவழியா 33 ஆண்டுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமூக விடியலை நோக்கிய பயணத்தில் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் வலிமை சேர்த்தவர் மர்ஹும் எம்.வை.எம். மன்சூர் ஆவார்.

இவ்வாறு இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹூம் எம்.வை.எம். மன்சூரின் 33 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;

நாடி நரம்புகளில் முறுக்கேறிய இளமைப் பருவம்,எதனையும் எதிர்கொள்ளும் துணிவு,கொள்கைப் பிடிப்பு, இலட்சிய வேட்கை, கலங்கமற்ற கட்சிப்பணி,மாசு மறுவற்ற தலைமைத்துவ விசுவாசம், அத்தனையும் ஒரு சேரப் பெற்றிருந்தார் மர்ஹூம் எம்.வை.எம். மன்சூர்.

வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்தவர்களின் துரோகத்தனத்தினால் பாசிஷப் புலிகளிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையானார் - ஷஹீதானார். விருட்சத்தின் வளர்ச்சிக்கு உரமானார். சுவனமும் புஷ்பங்கள் நிறைந்த சோலை தான்.

1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி அவர் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அன்னாரது 33வது நினைவு தினம் இன்றாகும்.

இது இப்படி இருக்க இலங்கை சுதந்திரம் அடைந்து சுமார் 40 வருடங்களில் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கென முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியை பெரும் தலைவர் அஷ்-ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரஃப் தோற்றுவித்தார்.அவரது தனி மனித ஆளுமையும், தூர நோக்குச் சிந்தனையும், தலைமைத்துவ வசீகரமும், ஆற்றொலுக்கான பேச்சு வன்மையும் அவர் பால் மக்களை அணி திரளச் செய்தது. அம் மக்களை ஒன்றுபடுத்தி, ஒழுங்கு படுத்தி அவர்களுக்கு சிறப்பான தலைமைத்துவத்தை மர்ஹூம் அஷ்ரஃபால் வழங்க முடிந்தது. பாய்ந்து வரும் பேராற்றில் உறுதியான அடிப்பாறை போன்று அன்னாரது தலைமைத்தும் சிறந்து விளங்கியது.

சில்லாங்கொட்டைகளைப் போல் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தவர்களை ஒரு அரசியல் சமூகமாக மாற்றியமைத்த பெருமை தலைமை அஷ்ரஃப் அவர்களையே சாரும். தேசமாகத் திரளுதல், ஒருங்கிணைந்த குரல், கட்டுறுதியான அரசியல் சமூகமாக மாற்றமடைதல், தேசிய இனம் என்பதற்கான இலட்சணங்களாகும்.

அஷ்ரஃப் அவர்களின் அரசியல் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் மர்ஹூம் மன்சூர் அவர்களும் ஒருவராவார். முன்னிலைப் போராளிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவர் முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த தேர்தல்களிலும் களம் கண்டார். 1988ம் ஆண்டு

நவம்பர் மாதம் 19ம் திகதி நடைபெற்ற இணைந்த வட கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அது ஜனாதிபதி ரணஷிங்க பிரேமதாஸாவின் ஆட்சிக் காலம். 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் முழு ஆதரவுடன் பிரேமதாசா வெற்றி பெற்றார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரேமதாசா, அதன் அடிப்படையில் உருவான மாகாண சபை ஆட்சி முறைமையை இல்லாமல் ஆக்குவதும், இந்தியப் படையை நாட்டை விட்டு வெளியேற்றுவதும் அவரது பிரதான குறிக்கோளாக அமைந்திருந்தன. அக் குறிக்கோளை அடைவதற்கு விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். இரண்டு தரப்பினரும் கொழும்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

1989ம் ஆண்டு நடுப்பகுதியில் மஹியங்கனையில் இடம்பெற்ற “கம் உதாவ” எனும் களியாட்ட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி பிரேமதாசா இந்தியப்படை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பித்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசு அதன் படையை திருப்பி அழைத்துக் கொண்டது. இதன் காரணமாக இந்தியப் படையினர் வெளியேறிய இடங்களை விடுதலைப் புலிகள் நிரப்பிக் கொண்டனர். முஸ்லிம் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். சமூகத்தில் உள்ள பலர் விடுதலைப் புலிகளுடன் சமரசம் பேசத் தொடங்கினர். சிலர் விருந்து படைத்து மகிழ்ந்தனர். காட்டிக் கொடுப்புக்களும் தாராளமாக இடம்பெற்றன. முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களும் போராளிகளும் குறிவைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடினார்கள். கல்முனை முதலாளிமார், கல்விமான்கள் என பலதரப்பட்ட பிரிவினர் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் நிலையங்களையும் சுற்றி வளைத்த விடுதலைப் புலிகள் அங்கு இருந்த பொலீசாரையும் கைது செய்தனர். சட்டமும் ஒழுங்கும் நாட்டில் சீர் குலைந்து காணப்பட்டது. இத்தகையதொரு துயரமான இருள் சூழ்ந்த காலகட்டத்தில் தான் மாகாண சபை உறுப்பினர் மன்சூர் கல் நெஞ்சம் படைத்த கல்லி மரங்களால் (சமூக துரோகிகள்) காட்டிக்கொடுக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையானார். அவர் சிந்திய இரத்தமும் கண்ணீரும் எம் நெஞ்ஞங்களில் மாறாத ரணங்களாக இன்றும் இருந்து கொண்டே இருக்கின்றது.

அவருடைய தியாகம், அர்ப்பணிப்பு, சமூகத்தின் பற்று என்பன விலைமதிக்க முடியாததாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவழியா 33 ஆண்டுகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)