
posted 11th January 2023

TELO

TNA
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல் நேற்று செவ்வாய் (10) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் பொதுமக்களும், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையிலும், இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றுக் காலை 10 மணிக்கு இந்த நினைவேந்தல் நடைபெறுமென சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். நேற்றுக் காலை 9.30 மணியளவில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், தமிழரசு மூத்த துணைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆனாலும் ஏனைய கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்களும் அதே நேரத்தில் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள், குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)