
posted 3rd January 2023
2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று இலங்கை முழுவதும் உள்ள அரச அலுவலகங்களில் இடம்பெற்றது.
நேற்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்திலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சத்தியப்பிரமாண நிகழ்வு
வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2023 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கள் காலை 9.00 மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் இராணுவத்தினர் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதுவருட சத்தியப் பிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)