
posted 9th January 2023
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்குள்ளும், ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டுமெனும் பிரதான கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்புபோராட்டம் அம்பாறை மாவட்டத்திலும் இன்று திங்கட்கிழமை (09) ஐந்தாவது தினமாக நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 5ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் தினமும் பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் சுழற்சி முறையில் பங்கு பற்றி வருகின்றனர். மேலும் இந்த தொடர்கவனயீர்ப்புப் போராட்டம் நாளை 10ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நிறைவு பெறவிருக்கின்றது. இந்த இறுதி போராட்ட நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருந்தொகையானோர் கலந்து கொள்ளவிருப்பதுடன், மாவட்ட தமிழ் அரசியல் வாதிகள், மதகுருமார் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)