திடசங்கற்பம் பூணுவோம்

ஊழல், மோசடி, இலஞ்சம் அற்ற நிர்வாகங்களை கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் புதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப் பிரமாண நிகழ்வு திங்கட்கிழமை (02) இடம்பெற்றபோது தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வினைத்திறன்மிக்க முகாமைத்துவம், நிலைபேறான அபிவிருத்தி, பொருளாதார மீட்சி போன்ற விடயங்களை கருப்பொருளாகக் கொண்ட இப்புதுவருட சத்தியப் பிரமாண நிகழ்வில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் கே.எம். றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே. ஹலீம் ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ. வட்டபொல, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம். நௌசாத் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

துயர் பகிர்வோம்

மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கும் ஏனையவர்களுக்கும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையுரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது;

உள்ளூராட்சி சேவை என்பது ஏனைய அரச சேவைகளை போன்றல்லாது சற்று வித்தியாசமானதாகும். ஒரு நபரின் பிறப்பு முதல் இறப்பு வரை சம்மந்தப்படுகின்ற அனைத்து விடயங்களையும் உள்ளூராட்சி சபை ஒருங்கமைத்து, வழங்கி வருவதை எல்லோரும் அறிவீர்கள்.

The Best Online Tutoring

நாட்டில் ஒரு குட்டி அரசாங்கமாக வர்ணிக்கப்படுவதுதான் உள்ளூராட்சி மன்றமாகும். மாநகர முதல்வர் தலைமையிலான இந்த சபையில் நாங்கள் காரியாலய உத்தியோகத்தர்களாக பணியாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

சேவைகளை வழங்குவதற்கு பிரதானமாக தேவைப்படுவது நிதியாகும். அதனை நாங்களே திரட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனைய அரச நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்வது போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதியொதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. தாங்களாகவே வருமானங்களை சேகரித்து மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும். ஆகையினால்தான் இரட்டிப்பான பொறுப்புடன் உள்ளூராட்சி சபை ஊழியர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.

நான் இங்கு ஆணையாளராக கடமையேற்று கிட்டத்தட்ட 05 மாதங்கள்தான் கடந்திருக்கின்றன. இப்புதிய ஆண்டில்தான் ஊழியர்களின் ஒரு நிதி ஆண்டுக்குரிய முழுமையான செயற்பாட்டினை அளவிடக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

ஆகையினால் எங்களிடம் பல குறைபாடுகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து நல்லதொரு பயணத்தை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை ஊழியர்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலங்களை விட இரட்டிப்பான சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என அனைத்து ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அந்த வகையில் எல்லோரும் சிறப்பாக செய்யப்படுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக சேவையாற்றிய 15 ஊழியர்களை ஒரு குழுவின் மூலம் தெரிவு செய்து, கௌரவிப்பதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவும் அதன் மூலம் சிறப்பான மக்கள் சேவையை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு கௌரவிப்பு விழாவை ஏற்பாடு செய்கிறோம். ஆகையினால், நமது சக ஊழியர்கள் பாராட்டப்படுவதை இன்முகத்துடன் வரவேற்று, ஒத்துழைப்பு வழங்க அனைவரும் முன்வர வேண்டும்.

அத்துடன் ஊழல், மோசடி, இலஞ்சம் அற்ற நிர்வாகங்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. ஆகையினால் அனைத்து ஊழியர்களும் ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு துணைபோகாமல், அவற்றுக்கு எதிராக செயற்படுகின்ற ஊழியர்களாக மாற வேண்டும். இவற்றுக்கு அடிப்படை காரணிகளாக இருப்பவற்றை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி சபைகளில் ஒரு முதன்மையான சபையாக நமது கல்முனை மாநகர சபையை தூக்கி நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்குமாயின் இதனை இலகுவாக சாத்தியப்படுத்திக் கொள்ளலாம் என்று அஸ்மி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

திடசங்கற்பம் பூணுவோம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)