
posted 11th January 2023
“தமிழ்க்கட்சிகள் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது மகக்ளுக்காக ஒன்றுபட்டே செயற்பட முன்வரவேண்டும்” இவ்வாறு கல்முனை திரு இருதய ஆண்டவர் ஆலய அருட் தந்தை ஏ. தேவதாஸன் அறைகூவல் விடுத்தார்.
வடக்கு கிழக்க ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வந்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதி நாள் பூர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டுமெனும் பிரதான கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று முடிந்தது.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற மேற்படி போராட்ட இறுதி நாள் நிகழ்வில் அருட் தந்தை தேவதாஸன் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“எம்மிடையே ஒற்றுமையும், ஒருமித்த ஒன்றுபட்ட செயற்பாடுகளும் கட்டிக்காக்கப்பட வேண்டும்.
இன்றைய நிலையில் விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் தமிழ்க் கட்சிகளும் தமிழ்த் தலைமைகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நாம் தனித்தனியே கட்சி என்ற குறுகிய வட்டத்துள் நின்று செயற்படுவதால் எத்தகைய விடிவையும் கண்டுவிட முடியாது, எதனையும் எளிதில் சாதித்து விடவும் முடியாது.
எனவேதான் வாக்களித்த மக்களுக்காகவும், புரையோடிப் போன இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு, அத்தகைய பலத்துடன் செயற்பட முன்வர வேண்டும்.
நாம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மக்கள் என்ற உணர்வுடன் எதிர்கால பிரஜைகளின் சுபீட்சத்தையும் நோக்காகக் கொண்டு ஒன்றுபட்ட செயற்பாடுகள் மூலம் தீர்வுகளைக் காண்போம் என்றார்.
பெரிய நீலாவணை மகா விஷ்ணு ஆலய பிரதம குரு. சிவஸ்ரீபத்ம நிலோஜன் குருக்கள் உரையாற்றுகையில்,
“கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கென ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, தேசியப்பட்டியல் மூலமே எமக்கான பிரதி நிதியைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. நாம் பல கூறுகளாகப் பிரிந்தமையே இதற்கான காரணமாகும்.
திருகோணமலையிலும் இத்தகையதோர் நிலையே ஏற்பட்டது. இந்த நிலை தொடர்ந்து நாம் பிரிந்து செயற்பட்டால், பலதசாப்தங்களுக்கு போராட வேண்டியவர்களாகவே தமிழினமிருக்கும்.
எனவே, தமிழ் மக்களின் குறிப்பாக வட கிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு தமிழ்க்கட்சிகளும், அதன் தலைமைகளும் திடசங்கற்பத்துடன் இனியும் முன்வரவேண்டும்.
பிரிந்து செயற்படுவதால் இருப்தையும் இழந்து விட்டு நடுத்தன்மையை நிற்கவைக்கும் பேரினவாத சூழ்ச்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது.
நாம் கோரிநிற்கும் தீர்வைப் பெற்றுத்தருவதற்கும் தமிழ்ப்பிரதி நிதிகள் ஒன்றுபட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அடுத்துவரும் தேர்தல்களில் ஒரே அணியில் ஒரே சின்னத்தில் தமிழ் அரசியல் வாதிகள் களமிறங்க வேண்டும்” என்றார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)