
posted 4th October 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிந்தனைச் சிற்றருவிகள்
04.10.2023
சிரிக்க முடியாத வாழ்க்கை - சிந்தித்துக் கழைத்த மூளை - துயரைத் தாங்கி இன்னமும் துடிக்கும் இதயத்துடன் - என் உயிரைத் தாங்கும் உடலும்தான் என் உலகத்தின் உயர்ந்த அதிசயங்களாகும்.
03.10.2023
மறக்காத மனமும், மன்னிக்காத குணமும் ஒரு மனிதனுக்குரியன அல்ல.
01.10.2023
வானமும், பூமியும், இந்த நாம் வாழும் வாழ்க்கையும் தற்காலிகமே!
நாம் வாழும் போதே மற்றவரை வதைக்காத வார்த்தைகளை வெளியில் விட்டு வாழாமல், வாழவைக்கும் உணர்வுகாளான அன்பு, பாசத்தை அனைவருடனும் பகிர்ந்து வாழ்ந்துதான் பாருங்களேன்.
நம்மை நோக்கி அழிக்கவரும் எந்த அனர்த்தங்களும் இடம்தெரியா அகன்று போகும்.
28.09.2023
மற்றவரின் பிரச்சினைகளை நீ காணாமலும், கேட்காமலும் இருக்குமட்டும்தான் உன் பிரச்சினை இமயம் போன்று தோன்றும்.
ஏன் தூரத்திற்குப் போவான்?
எட்டிப் பார் அயலவனை - அவன் துயரால் புலம்புவதை கேட்டுப்பார்.
அப்போதுதான் தெரியும், உன்னை வாட்டி வதைக்கும் துன்பங்கள் உன் காலின் கீழே ஒட்டியிருக்கும் தூசிகள் என்று.
விழித்தெழும்பு - உன் துன்பங்களைத் தூசியென உதறிவிடு.
நீ வளருவதனை, வாழ்க்கையில் உயருவதை உன்னாலேயே இனித் தடுக்க முடியாது.
27.09.2023
நன்மைகள் செய்யுங்கள் நானிலம் செழிக்கும்
24.09.2023
நிதானத்தை நிற்கதியாக்காதே
அவ்வாறாக்கிப் பார்
உன் வாழ்க்கை நிலைகுலைவதை யாராலும் தடுக்கவே முடியாது
14.09.2023
ஏணியில் ஏறினால் உன்னை அது ஏற்றும்
ஏரியில் இறங்கினால் அது உன்னைத் தாக்கும்
ஏணியில் மற்றவரை எற்றி மகிழப்பார்
ஏரியில் மற்றவரை இறக்கி பாவத்தைத் தேக்காதே!
24.08.2023
உன் வாழ்க்கையில் இப்போது நீ பார்க்கும் கடந்தகால விஷயம் ஒரு துரும்பாகத்தான் தெரியும்.
ஆனால், அந்தத் துரும்பு உன் கடந்த காலத்தில் பெரும் பாறாங்கல்லாய் உன் நெஞ்சைப் பிசுக்கி இருக்கும்.
அந்தப் பாறாங்கல்லை உன்னோடு சேர்ந்து சுமந்தவனை எப்படி உன்னால் மறக்க இப்போது முடிந்தது?
20.07.2023
துக்கம் இருந்தால் தூக்கம் வராது
தூக்கம் வந்தால் துக்கம் இருக்காது
வாழ்க்கையில் நீ ஜெயிக்க உனக்குத் தேவை
தூக்கமா? துக்கமா?
நீயே தெரிவு செய்.
18.07.02023
சிந்தனை தூய்மையாக இருந்தால்
ஒருவரின் செய்கையும் தூய்மைபெறும்.
19.06.2023
உன் குடும்பம் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றால்
நான், ஆண், என்ற ஆணவத்தைத் தலைமுழுகு.
17.06.2023
உறவுகளின் மேல் உனக்கு உரிமை உண்டுதான்
என்று நீதான் நினைப்பாய், உன் உறவுகள் அல்ல
15.06.2023
கடிகாரத்தின் முள்ளுகள் எப்பவும் முன்னோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும். நேரமும் முன்னோக்கியே இருக்கும்
நீயும் உன் வாழ்க்கையிலும் முன்னோக்கியே ஓடு - முன்னேற்றத்தையே எதிர் கொள்ளு
வெற்றி உன்னை வரவேற்க்கக் காத்து நிற்கிறது
11.06.2023
உன்னிடம் உள்ள போது பிசினாய் ஒட்டிக்கொள்பவர்
உன் நிலைமை தாழுகையில் உனை உதறிச் செல்ல
ஒரு செக்கன் தேவையில்லை அவர்க்கு;
நீ என்ன செய்யப் போகிறாய்?
சிந்திக்கும் இடத்தில் நீ; சிந்தையில் துடிக்கப் போபவர் அவர்கள்;
நீ என்ன செய்யப் போகிறாய்?
09.06.2023
துன்பந்தான் நெடுகவும் என்று துவண்டு போகாதே!
வந்த இரவு விடிந்துதானே ஆகும்
உனக்கும் விடிவு வரும் - நிமிர்ந்து நில்!
08.06.2023
மன உளைச்சலை உனக்குத் தந்தவர்கள்
வெகு விரைவில் உதிர்ந்தே போவார்கள்
இது ஒருவனைத் திட்டுவதல்ல
நல்லவனின் மனக் கொதிப்பு கற்பிக்கும் பாடம்
06.06.2023
நன்மையைச் செய். காலைப்பொழுது நல்லதாய் விடியும்
தீமை செய்யின் உன் தலையின் மேல் இடியாய் விழும்
05.06.2023
துன்பத்தால் நீ எத்தனை சகாப்தங்கள் துவண்டாலும்
உனக்கென்ற ஒரு விடிவெள்ளி உதிக்காமலா போகும்
04.03.2023
சாவோ உன்னை ஒருநாள்தான் கொல்லும், ஆனால்,
வார்த்தையோ உன்னை நித்தமும் கொல்லும்.
03.06.2023
விட்டெறியும் அம்பு குறி தவறியும் செல்லும், ஆனால்,
கெட்டறிவினர் சொல்லோ உன்னைத் தவறாமல் தாக்கும்
02.06.2023
வார்த்தையினை நம்பி உன் வாழ்க்கையினைத் தொலைக்காதே!
01.06.2023
உன்னை ஒருவன் பாராட்டுகிறான் என்றால், நீ ரொம்ப அவதானமாக இருந்து கொள்.
ஏனென்றால், அவன் உன் காலின் கீழ் குழி தோண்டத் தொடங்கிவிட்டான் என்று சுதாகரித்துக் கொள்.
31.05.2023
ஒருவனைப்பற்றி நீ அறிய வேண்டுமா?
அவனது வார்த்தைகளை நித்தமும் கவனி.
30.05.2023
ஒட்டமாட்டேன் என்ற உறவை கிட்ட ஏன் வைத்திருக்க வேண்டும்?
17.05.2023
உன் வாயில் நின்று வெளிவரும் வார்த்தை
மற்றவரை வாழ வைக்கிறதோ, இல்லையோ
அடுத்தவரை அழவைக்கக் கூடாது
10.05.2023
தெரிந்த எதிரிகள் தடிமலைப் போல
தெரியாத எதிரிகளோ புற்றுநோய் போல
நீ உயர்ந்திட்ட பின்பு உன்னைத் தாங்கியவனை மிதிப்பவன் நீயாகத்தானிருப்பாய்
அதை மனித இயல்பென்று படைத்தவன் மடியிலும் கைவைக்கத் துணிவாய்
ஏனென்றால் நான் மனிதன் என்பாய் - பலவீனமானவன் என்றும் சொல்வாய்
ஆனால், உன் விதியினை நீயே தீர்மானித்து விட்டாய் என்று விளங்கவில்லையா உனக்கு?
08.05.2023
நீ உன் வாக்கைக் காப்பாற்றிப் பார்
வாழ்க்கை உன்னைக் காப்பாற்றும்
07.05.2023
அனேகமானோரின் ஆசைகள் நீறுபூத்த நெருப்பைப் போன்றதே
06.05.2023
உன் வாழ்க்கை செழித்தோங்க
உதய சூரியனாக உதித்தெழு
உன் காலடியில் உனை விழவைக்கும் உறைபனியை
உருக்கி விட்டு எழுந்து வா உயிரே!
18.04.2023
நீ அமைதியாய் இருந்து பார்
அனைத்தும் அதில் அடங்கிவிடும்.
16.04.2023
மனிதர் மனிதரை நேசிப்பதைவிட
மண்ணை நேசிப்பவரே அதிகமாவர்
இது மாறுமா? மாற வேண்டுமென்றால்
என்ன செய்யலாம் நீயே சொல்லு!
06.04.2023
எம் மனம் இளமையாக இருக்கும் போது
நாம் செய்த தவறுகள் உறங்கியது போல நடிக்கும்
எப்போது நம் உடலும், உள்ளமும் நலிகின்றதோ அப்போது அவையெல்லாம்
புழுப்போல அரித்து, அரித்துக் கொண்டு வெளியே வரும்
அப்போது உடல், உள்ளம் முழுவதாக வலிக்கும்
அவ்வலியினைத் தாங்க முடியாமல்
துடிக்கும்நிலை வந்தே தீரும்.
இப்போது திரும்பிப்பார்,
நீ வாழ்ந்த வாழ்க்கையின் வரைவிலக்கணம் தெரியும்.
05.04.2023
நீ எப்போது வீழ்வாய் என்று பார்ப்பவர்தான் உன்னுடன் இருப்பர்
எனவே உன் காலடியைக் கனவிலும் பார்த்து வை.
01.04.2023
நீ தாங்கியாய் நின்று உயர்த்திய உன் உறவுகள்
உன்னை உதறி எறிந்திட ஒரு வினாடியோ அதிகம்
அந்த வினாடி தரும் நோவோ உன் உயிரையே குடிக்கும்
ஆனால், நீ செய்த நன்மைகள் உன்னுயிரினை மீட்கும்.
18.03.2023
வரலாறைத் திணித்து, வதந்திகளை உண்மையாக்கி, நிரந்திரமில்லா வாழ்க்கைக்கு வடிவமைத்து, கொடிநாட்டி, சிதறப்போகும் பூமியினை உரிமையாக்கிக் கொள்ள முயலும் மனித இனத்தைப் பார்க்கப் பாவமாக இருக்கின்றது.
இந்த உலகு ஒரு நாள் இல்லாமல் போகும். அப்போது சரித்திரம் இல்லை. சேர்த்து வைத்த சொத்தும் இல்லை. நீ இல்லை; நான் இல்லை; ஒன்றுமே இல்லை; கணிதம் இல்லை; படிவங்கள் சேர்த்து வைத்த கணணியும் இல்லை;
எல்லாம் இறை அடி சேர்ந்து விடும் - எல்லா உயிர்களும் நீதித் தீர்வைக்கு நிறுத்தப்படும் - குற்றவாளிகளாக!
சிந்தித்துப் பார்!! இதில் எது நிரந்தரம்?
13.03.2023
ஒருவரை உடனே மதிப்பிட முடியாது. அது இலகுவானதுமல்ல.
அவரை மதிப்பிட அவரின் வாயிலிருந்து வரும் வார்த்தையே போதும்.
அவ்வார்த்தையானது ஒரே நேரத்தில் வருமென்றில்லை.
ஆனால், அதே வார்த்தை மீண்டும் ஒருநாள் கட்டாயம் அவர் வாயினின்று வெளிவரும்.
அதற்கு வருடங்கள் பலவும் கூட ஆகலாம். நீ, காத்துத்தான் ஆக வேண்டும்.
அதே வார்த்தை, அதே கருத்துடன் வெளிவந்தால், நம்பிக்கையை வளர்த்துக் கொள். இல்லையேல் விலகி செல்!
09.03.2023
சிந்தைக்குப் போகாத எந்தச் சொல்லென்றாலும் உதட்டினால் கசிய விடாதே!
22.02.2023
நமக்காக வாழ்வது சுயநலமே!
அவ்வாறு வாழ்வோர் வாழ்விலும் இறந்தவராவார்
ஆனால்,
மற்றவருக்காக வாழ்வது பொதுநலம்
அவ்வாறு வாழ்வோர் இறப்பிலும் வாழ்வர்
27.01.2023
துன்பங்கள் துயரங்கள் எல்லாம் கடந்து போகும்
அது மீண்டும் திரும்பிவரும், ஆனந்தப் பெருக்காய்.
கவலையை விடு! அந்நாளுக்காகக் காத்திரு!
22.01.2023
உன்னை உறவுகள் கைவிடும்
உன்னுடன் பிறப்புகள் புறக்கணிக்கும்
நட்புகள் வஞ்சம் தீர்க்கும்
உன் அயலவன், அண்டியவன் ஒன்றாய் புறந்தள்ளுவர்
நீ இடறுப்படுவாய், வீழ்ந்து வீழ்ந்து எழும்புவாய்
உன் இடறலிலும், வீழ்ச்சியிலும் கை தூக்குவான் பாரு
அவனேதான் உன்னைப் படைத்த அந்த இறைவன்
தினமும் கையேந்திக் கும்புடு, நன்றியையும் சொல்லு
விடியும் நாள் வெற்றியாக விடியும்
04.01.2023
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியினையும் சிந்தித்தே வைக்க வேண்டும்.
அவ்வாறு சிந்திக்கத் தவறினால் வாழ்க்கை அதை உணர்த்தும்.
அது தாங்க முடியாக் கொடுமையாக இருக்கும்.
காலம் போகவில்லை - சிந்தித்து செயல்படுவோம்.
28.12.2022
நீ தொட்டது பாவம் என்றால்
உன்னைத் தொடர்வது சாபம்
உன்னைத் தூக்கி எறிந்தவன் மீண்டும் வந்தால்
தாங்கிப் பிடிக்கவே பிடிக்காதே
வேஷம் போட்டு வேட்டையாட வருகிறான் என்று
விலகியே செல்லு
உன் மீதி வாழ்க்கையாவது நன்கே இருக்கும்.
23.12.2022
முள்களும் கற்களும் உன் பாதையில் இருக்கும்
விலக்கி வைத்து போகவும் முடியும்
கண்ணில் தெரியா விதைத்துள்ள இவற்றை
தாண்ணிட நீயும் என்னதான் செய்வாய்?
தொடர்ந்து போ, துணிந்து முன்னேறு, ஜெயம்!
22.12.2022
உன் உண்மையான அன்பு பலரால் உணரமுடியாது
அது திரும்பி வரும் உன்னிடம், கவலை கொள்ளாதே
அவர்கள் அதற்காக ஏங்கும் காலம் விரைவாக வரும்
அப்போதும் கலங்காதே!
17.12.2022
நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது
நம் முதுமையில் தெரியும்
அப்போது பழையன புதியனவாய்த் தெரியும்
காலம் கடந்திருக்கும், மனமோ கனகனக்கும்
வெளியே எறியமுடியாப் புழுவாய் அரிக்கும்
முதுமை வாத்தியாராய்ப் பாடம் எடுக்கும்
அதுவோ மீள முடியாக் கொடுமையாயிருக்கும்
நாமோ நம்மைச் சபித்து கூனிக் குறகி நிற்போம்
அறுவடைக்குத் தயாராகவுள்ள மரங்கள் நடுவே
இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிவோமா அப்போ கூட…???
15.12.2022
வளர்வதற்கு ஒரு காலம்
தேய்வதற்கு ஒரு காலம்
தேய்பிறையல்ல வளர்வதற்கு
இது வாழ்க்கை
13.12.2022
ஆறுதல் வேண்டுமென்று எவர் தஞ்சம் போகாதே!
அது முனிவனாய் இருந்தால் கூட!
வாழ்க்கையானது தடைக்கல்கள் நிறைந்தது.
அக்கல்களைப் போடுபவர்கள் உன்னோடு உள்ளவர்கள்தான்.
அவற்றைக் கடந்து போ, இல்லையேல், தூக்கி எறிந்துவிட்டு
போய்க் கொண்டேயிரு
09.12.2022
நீ கெட்டவன் என்பதற்கு கெட்டவனாக வேண்டும் என்றில்லை
நல்லவனாக வாழ்ந்து பாரு அப்போது தெரியும்
சமூகத்தில் உன் பெயர் என்னவென்று.
07.12.202
பணத்தினால் ஒட்டும் உறவுகள் உறவல்ல
பாசத்தால் ஒட்டுவனவே உறவுகளாம்
நிஜத்தில் வாழுங்கள் அல்லது வாழப் பழகுங்கள்
கனவில் சாகாதீர்கள்
01.12.2022
உண்மைகள் சாவதில்லை
நீதியோ நிற்கதி ஆவதில்லை
நிலையாக இருப்பவை இவையெல்லாம்
நிமிர்ந்து நில்லு இவ்வலகின் முன்னே
இவற்றையெல்லாம் வாழ்க்கையாக நீ ஏற்றிருந்தால்
30.11.2022
நாம் விதைத்ததை அறுவடை செய்யும்வரை இவ்வுலகு எமக்கு டாட்டா காட்டாது.
29.11.2022
இப்போதுள்ள உறவானது கிடைக்குமா மீண்டும் இன்னொரு பிறப்பினிலே சொல்லு?
வீம்பை விட்டு, அன்பை விதைத்து, அழகான உலக வாழ்வை வழமாக்க வாரீர்.
24.11.2022
ஏமாறுபவர்கள் இருக்கும் இடத்தில்தான் ஏமாற்றுபவர்கள் முளைப்பார்கள்
23.11.2022
துன்பம் துவட்டிடினும்
துயரம் வதைத்திடினும்
தூக்கமின்றி முயலும் முயற்சிதனைக் கைவிடாதே
அது உன்
தூக்கத்திலும் உழைப்பைத்தரும்.
வாழ்க்கையின் வலியைத் தாங்குங்கள்.
அந்த வலி உங்களைக் கையெடுத்துக் கும்பிடும் அளவிற்கு உயர்த்தியே தீரும்.
21.11.2022
எமது வாழ்க்கை பல சமயம் கனவுகளாகவே இருக்கும்.
அட அது கனவுதானே என்று வாழ்க்கையைத் தொலைக்கவும் கூடாது
அக் கனவுகளை நனவாக்க தொடர்ந்து உழைப்பதை நிறுத்தவும் கூடாது
18.11.2022
அழகான வாழ்கை இது - அதை வாழ்ந்துதான் பார்ப்போமே!
அன்புடன் வாழ்ந்த உடன் பிறப்புகளின் உள்ளார்ந்த ஒற்றுமை திருமணத்துடன் காலாவதி ஆகிவிடும்
15.11.2022
உனது குறிக்கோளுக்காக உழைத்துக்கொண்டேயிரு
அவ்வுழைப்பினால் உன் குறிக்கோள் உன்னை நெருங்குவதை
நீ உணர்வாய், நிட்சயமாக நீ அடைவாய்.
தவறை ஒருவன் எப்போது உணர்வான்?
தவறை தவறென்று அவனாக அறிந்து கொண்டால் மட்டுமே
14.11.2022
சிந்திக்கத் தெரிந்த நாம் நம் சிந்தையை பிழையாகச் சிதறவிடுவதுமேன்?
நீ நல்லாக இருக்க வேண்டுமானால்,
உரிமையில்லா உறவுகளை உதறியெறி.
வாழ்க்கையின் பாடத்தை வாழ்ந்துதான் கற்க முடியும்

11.11.2022
எப்பவும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டிய நினைவாலயம்.
இங்கே,
உறவுகள் இல்லை; உணர்வுகள் இல்லை; உணவும் தேவை இல்லை;
எதுவுமே இல்லாத, எதுவும் தேவைப்படாத நிரந்தரத் துயிலகம்;
பலரும் அங்கே அயலவராய்த் துயில்வர்;
தனிமையாக இருந்தும் தனிமை வாட்டாது;
கவலையற்ற நிம்மதி நிறைந்த உறைவிடம்;
எதையுமே சிந்திக்காத சிந்தையில்லாத உலகது;
இவற்றில் ஒன்றை நாமோ உணர்ந்தால்,
நம்முள் உள்ள எல்லாம் அடங்கியே தீரும்;
08.11.2022
நீயும் நானும் மனிதப் பிறவிகள் தான்
உனக்கும் எனக்கும் ஓடும் இரத்தம் சிவப்புத்தான்
மூளையும் நரம்பும் அடிப்படையில் ஒரே கலங்கள்தான்
நுள்ளினால் உனக்கும், எனக்கும் வலிக்கும்தான்
பிறர் குற்றங்களை, துரோகங்களை மன்னி மன்னி என்று மதங்கள் சொல்லுகின்றன
நீ என்ன செய்யப் போகிறாய்? நானோ யோசிக்கின்றேன்....
நம்பியவர் உனக்கு துன்பம் செய்தால் விலகி இரு
உறவாடிக் கெடுப்பவர் மேல் எப்பவும் விழிப்பாயிரு
இவ்வாறு உள்ளவர் மட்டில் சகவாசம் கொள்வதையே மறந்துவிடு
வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவண்டு போகாதே!
அத் தோல்விதான் உன் வெற்றியின் முதற்படி
துன்பம் செய்தால் துக்கமே விளையும்
அன்பைக் கொடுத்தால் இன்பமே பொழியும்
07.11.2022
எல்லாரையும் அன்பு செய், ஆனால்,
அதையே அவர்களிடமிருந்து எதிர்பார்க்காதே!
நீ எல்லோருக்கும் நல்லவனாக இரு; குற்றமில்லை
ஆனால், ஏமாளியாக மட்டும் இராதே.
04.11.2022
பாசத்தைப் பிரித்துப் பாவத்தைத் தேடாதே!
மனமும் தள்ளாடும் நேரம் வரும்
சரியா தப்பா என்று புரியாமலும் இருக்கும்
வாழ்வா சாவா என்ற நிலையும் வரும்
மனத்தைத் திடப்படுத்தி மீண்டு எழுந்திடு
இவ்வாழ்வும் இனிக்கும் வந்தவை அருகிடும்
நடந்தவை என்னவென அப்போ விளங்கும்
02.11.2022
உனது முன்னேற்றத்தைத் தீர்மானிப்பது நீ அல்ல
உன்னுடன் உறவாடும் அனைவரும்தான்
கனவும், உன்னிடம் காசு இருந்தால்தான் நல்லதாய் அதுவும் வரும்
இல்லையென்றால் அதுவும் உன்னைக் கைவிடும்
01.11.2022
மற்றவரை மனதார வாழ்த்துங்கள்
உங்கள் வாழ்வு வளம்பெறும்
31.10.2022
நன்மைக்காய் வாய் திறந்தால் பகைவனாவாய்
உண்மைக்காய் வாய் திறந்தால் நீ ஊமையாவாய்
30.10.2022
நாம் நினைப்பது, செய்வது எல்லாம் எம் இஷ்டப்படியே
அவற்றை எல்லாம் சரியென்றே இருப்போம்
ஆனால், தெய்வம் என்ன நினைக்கிறது? என்ன செய்யப் போகிறது என்று நினைப்பார் ஒருவருமில்லை
பொறுத்துப் பார்க்க முன்பு நம் பயணம் முடிந்துவிடும்
இன்று நான் என்ன செய்தேன் என்று நினைத்துப்பார்
நன்மைகளைச் செய்தேன் என்றால் பெருமிதமாக நிமிர்ந்து நில்
தீமைகள் செய்தேன் என்றால் திருந்தி வாழ உன்னை மாற்றிக் கொள்
ஒன்றுமே செய்யவில்லை என்றால் உன்னையே நீ சபித்துக் கொள்
நீதிக் கரம் கெதியில் நீழும்
27.10.2022
நீ எடுத்தா சங்கு
நான் கேட்டா அது பங்கு
உண்மையைத் தேடிப்பார்
அது உன் உள்ளத்திலும் இருக்காது
உன் உதட்டிலும் வராது
ஏனென்றால்,
அதுதான் உன்னட்டையே இல்லையே!
24.10.2022
எவர் செய்த நன்மையையும் மறவாதே!
தூக்கிவிட்டவனைத் துயரப்படுத்தாதே!
காலம் மாறும்; வீசும் காற்றின் திசையும் மாறும்
காத்திரு நீ செய்தவை உனைநோக்கி வருமென்று
20.10.2022
உலகம், வானம், கோள்கள் எல்லாம், எல்லாமே படைத்தவனுக்கே சொந்தம்
ஆறறிவைத் தந்து மனிதரையும் இவ்வுலகில் வாழவிட்டிருக்கே தவிர
எதுவும் எவருக்கும் சொந்தமாக்கத் தரவில்லை
ஒருதருக்கும் சொல்ல வேண்டாம்
தனிமையாகப் போய் இருங்கள் - அப்போது
உங்கள் மனத்திடமே கேளுங்கள், நீங்கள் செய்வது சரியா?
14.10.2022
உன் உடலே உனக்குச் சொந்தமில்லை எனும் போது
இந்த உலகத்தில் கூட எது சொந்தம் உனக்கு?
ஆனால், உனக்குச் சொந்தமாய் இறுதிமட்டும் வருவது என்ன தெரியுமா?
உன் மனதினில் நீ சேர்த்து வைத்த குப்பை கூழங்கள்தான்
அது அநியாயத்தில் தொடங்கி மற்றவர்க்கு செய்த அட்டூழியங்கள் எல்லாம்தான்
ஒருநாள் வரும் - அந்நேரம்;
அது உன் பயணம் முடியும் நேரம் - அறுவடை தொடங்கும் கணம்
அப்போது உன்னால் பார்க்கவோ, பேசவோ, ஏன் அசையவே முடியாது?
அப்போது எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று இப்போது சிந்திக்கின்றாயா?
தவறு - இப்போது சிந்தி!
சிந்தையில் தெளிவாகு
மனத்தில் வஞ்சகமும் உதட்டில் புன்னகையும்
உள்ளவர் வாழ்வு உலகத்தில் எவ்வளவுக்குத்தான் தங்கும்?
மாறாக,
உதட்டில் புன்னகையை உள்ளத்தின் தூய்மையிலிருந்து வரவைத்துப் பார்
உன் வாழ்வு செழிக்கும்
13.10.2022
இறுகிய மனம் கொண்டோரே! உங்களை மாற்றுங்கள்
காலம் மாற்றுமானால் அப்போ தாங்கமாட்டீர்கள்
காலமோ கொஞ்சம், கடமையோ மிச்சம்
முடிக்கப் பார், பாரைவிட்டகலுமுன்பே
அக்காலம் வெகு தொலைவிலில்லை உனக்கு
12.10.2022
ஏழையின் கண்களிலிருந்து கண்ணீரை வரவைப்பாயானால்
அக்கண்ணீர் மறையுமுன்பே உன் வாழ்க்கை காலியாகி விடும்
“காவோலையைப் பார்த்து குருத்தோலை சிரிக்குமாம்”
இப்போ றென்ட் மாறிவிட்டது.
குருத்தோலையைப் பார்த்துதான் காவோலை சிரிக்கமாம்.
ஏனென்றால், காவோலையின் அத்திவாரம் அப்படி.
வாழ்க்கையை, வாழ்க்கையாய் வாழ்பவன் இறந்தபின்பும் வாழ்வான்.
அப்போ வாழ்க்கை என்றால் என்ன?
அது தெரியாதா இன்னமும்?
நீயாகப் படித்துக் கொள்; வாழ்க்கையே படிப்பிக்குமானால் உன் மிச்ச வாழ்வோ நரகமாகும்.
அப்போ வாழ்க்கை என்றால் என்ன?
05.10.2022
சொத்தைப் பிரித்துப்பார் சொந்தங்களின் உண்மைநிலை அப்போ தெரியும்.
அவற்றைக் கைகழுவி விட்டுவிடு - உன் குடும்பம் எதிர் நோக்கவுள்ள பிணிகள் உங்களை விட்டகலும்.
வாழ்க்கையில் நீ விழுந்தபோது இல்லையில்லை உன்னை விழவைத்த போது, உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பாய் பாரு வரைவிலக்கணங்கள்
அவற்றை எந்த ஞானியாலும் ஞாலத்திற்குத் தந்திட முடியுமா என்ன?
27.09.2022
மற்றவரில் பொறாமை கொண்டு நீ பெறப்போவது தான் என்ன?
உன் ஆன்மீக வாழ்க்கையைத் தொலைப்பதுதான் மிச்சம்.
அதை உன்னால் உணர முடியாது, ஆனால்,
காலம் வரும், அதுதான் நீ உணருங்காலம்.
அது, காலம் கடந்த ஞானம், நீ தொலைத்ததை எடுக்க முடியாது, ஆனால்,
நீ விதைத்ததை அறுக்க மட்டும்தான் முடியும்
26.09.2022
வஞ்சகத்தை மனதில் வைத்து புன்னகையை உதட்டில் காட்டி
வையகத்தில் வாழ்பவர் அதிகமோ அதிகம்
இவர் தவிர, மனிதராய் இருப்பவருள் நீ வாழவேண்டும் என்றால்
என்னதான் நீ செய்ய வேண்டும்? ஆழமாகச் சிந்தி!
உன் அடிமனது வழிகாட்டும்.
உறவுகள் உன்னிடம் ஊறும் நாட்களில் உண்மையான பாசமென உன்னையே மறப்பாய்
கனவிலும் நினையா நாள் வரும் அப்போ உன் உதிரமும் உறையும் உவகையும் மறையும்
24.09.2022
தோல்வி உன்னைத் துரத்துகிறதா? கவலைப்படாதே!
ஏனென்றால், நீ வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறாய் என்று சந்தோஷப்படு.
இருளை நீ ஏற்றுக் கொள்வதால் தான் விடியல் உனக்கு வருகின்றது.
22.09.2022
வார்த்தையையும், வாழ்க்கையையும் விட்டால் திருப்பி எடுக்க முடியாது.
தோல்வியைக் கண்டு துவண்டு போகாதே!
எதிர்த்து நில்லு - உன்னை தூக்கவந்த எமனும் திகைப்பான்
துரோகியைத் தூரத்தில் வை என்பதைவிட
தூரத்திற்கு நீ அகன்று போய் விடு
சிந்தனைச் சிற்றருவிகள் ஒரு மனத்தின் சிதறல்கள். மனித நேயத்தை உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்க வைக்கும் ஒரு சுரப்பி.
வாழ்க்கை என்றால் என்ன? நாம் யார் இவ்வுலகுக்கு? நமது வரையறைதான் என்ன? என்றெல்லாம் உணரவைக்கும் உயிருள்ள மனச்சாட்சி.
தவறாமல் வாசித்து மனதினுள் ஆழப்பதியுங்கள். வளம் பெறுவீர்கள்.
09.09.2022
உறவுகள் உன்னைச் சுற்றிவர நிற்கிறதென்றால்
உன்னைக் காக்கவல்ல - உன்னைத் தொலைக்கவே!
08.09.2022
சிந்தித்துப் பார்!
கடந்து போன வினாடியில் நீ என்ன செய்தாய்?
07.09.2022
உண்மையை உதற ஒரு நிமிடம் காணும்
ஏன்தான் உதறினோம் என்ற வலி தாங்க உன் வாழ்நாளே காணாது.
வாழ்க்கை கரடு முரடாவதற்று காரணம் நாம்
நமது சிந்தனை தூயதாகவும், கலக்கமற்றும் இருந்தால்தானே
சிந்தனையைத் தூய்மைப் படுத்து வாழ்க்கை தானே மிளிரும்
06.09.2022
பயமாக இருக்கிறதா? வாழ்க்கை விரட்டுகின்றதா?
நீ பிறந்து விட்டாயே! உன் பாதையை நீ போட்டுவிட்டாயே!
அதுதான் இனி நீ போகப்போகும் வழி
இதெல்லாம் நீ பிறக்குமுன் யோசித்திருக்க வேண்டும்
தனது பிழைகளை உணரும் நாள் - அதுதான் அவன் மரணத்தருவாய்
அப்போ எல்லாவற்றிற்கும் இதயம் நொருங்குண்டு மன்னிப்புக் கேட்பான்
ஆனால், அவனால் பார்க்கவோ, பேசவோ முடியாது
மன்னிப்பின் முடிவில் மரணமும் அவனைத் தழுவும்
எவற்றாலும் திருத்தப்படாத ஒருவனை ஒருநாள்
மனச்சாட்சி திருத்தாமல் தூங்காது
வாழ்க்கை தாமரையின் மேலுள்ள நீர்க் குமிழி போல
எப்போது தான் விழப்போகிறதென்று அதற்குத் தெரியாது
எப்போது எமது வாழ்வும் முடியுமென்று இப் பூவுடலுக்கும் தெரியாது
05.09.2022
நீ நிம்மதியாக வாழ வேண்டுமென்றால்
உன்னைப் பிடிக்காதவரையும் மற
உனக்குப் பிடிக்காதவரையும் மற
01.09.2022
எண்ணத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்
வாழ்க்கை சொர்க்கமாக மாறும்
31.08.2022
உலகத்தில் உள்ளவை பகைமைக்கு வழிகாட்டுவன
பகுத்தறிந்து பயன்பெற மனிதரால் மட்டும் கூடுமே!
நீ படுக்கையில் உடனே நித்திரை கொள்ளாதே
திரும்பி நீ கடந்த அன்றைய நாளை கணங்கணமாகப் பார்
நீ வாழ்ந்த விதம் பயனானதா? விரயமானதா?
விரயமென்றால் அதைப் பயனாக்க இப்போ என்ன செய்யப் போகிறாய்?
ஏனென்றால் அடுத்த வினாடி எவருக்கும் நிட்சயமில்லை
நாம் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், பறந்தாலும்
இறுதியில் பூமாதேவியிடம் வந்துதான் ஆகவேண்டும்
வாழ்க்கை என்ற ஒரு குமிழி
உடைந்துலர்ந்திட எவ்வளவு நேரம் வேணும் சொல்லு
கிடைத்த வினாடியை வாழாது விரயமாக்காதே!
22.08.2022
உண்மைவாழ்வு உள்ளத்தைத் தாங்கும்
அவ்வுள்ளமே உன்னுயிரைக் காக்கும்
நம்பிக்கைத் துரோகம் என்பது
துடிக்கத் துடிக்க ஓருயுரை எடுப்பதிலும் கொடுமை
ஒருவரைத் தெரிந்தோ தெரியாமலோ வருத்துவது நோகாது
ஆனால் அது வந்த இடத்தை நோக்கி ஒருநாள் போகும்
அப்போது அவ்வலியைத் தாங்க அவர்கள் உடலில் தெம்பிராது
19.08.2022
உண்மைகள் வென்றிட ஓராயிரம் போராட்டம் நிகழ்த்தும்
பொய்மையைத் தோற்கடிக்க உதிரத்தைச் சிந்தவும் தயங்காது
15.08.2022
தேவை என்ற போது தேடிவரும் உறவு
உறவல்ல உள்ளத்துள்ளதே ஜீவிப்பதே
14.08.2022
உன் வாழ்க்கையில் நீ முன்னேறும் போது, பாதை கரடுமுரடாக்கப்பட்டிருக்கும்.
இதற்குக் காரணகர்த்தாக்கள் உன்னைச் சுற்றி உள்ளவர்கள்தான்; விளங்குமென நம்புகின்றேன்;
நீ கடக்க முடியாத வண்ணம் அவர்கள் கிண்டிக்கொண்டே இருப்பார்கள்;
விலகிப்பார் விடியல் உனக்கு நல்லதாகவே விடியும்.
உன்னைப் பொறுத்தவரையில் உண்மையான மனிதன் அல்லது நண்பன் என்று கற்பனையிலோ அல்லது சினிமாக்களிலோ இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் அப்படி ஒருவன் இல்லை என்பதுதான் உண்மை.
12.08.2022
ஒருவரைப்பற்றி அறிவதற்கு அவர் கதைக்கும் விதம் போதும்
ஒரு நேரம் காணாது - மாதக்கணக்காக - சிலசமயம் வருடக்கணக்காக அவதானிக்க வேண்டும்.
எங்கேயாவது ஒரு இடத்தில் அவரின் உண்மையான குணம் வெளிக்கும்
உன்னை உயர்த்திக் கதைக்கிறார்கள் என்றால்
உன் காலடியைக் கவனமாகப் பார்த்துக்கொள்
விளக்கமில்லா நியாயமும்
விளங்கமாட்டேன் என்பதும் ஒன்றுதானே!
11.08.2022
அகம் துயர் துடைக்கவல்ல ஈரம்
மனம் தரும் பானமல்லோ
10.08.2022
உன் மனமும், நாவும் ஒன்றையே கதைக்கின்றனவா? உன் உயிரும் அதற்கு இசைகின்றதா?
ஆம் என்றால், உன்வழி வெகுமதி நிறைந்த இறையாசீர் பெற்றவழி.
இல்லை என்றால், உன்வழி அழிவிற்கு இட்டுச் செல்லும் பாதாள வழி.
மனம் சுத்தமாக இருந்தால் சுகாதார வாழ்வு தானாக வரும்
வாழ்க்கை என்றால் என்ன?
காலை எழும்பியதிலிருந்து இரவு துயில் கொள்ளுமட்டும் நம் சயநலமான தேவைகளெல்லாம் செய்துவிட்டு,
மனச்சாட்சியையும், மற்றவரையும் நோகவைத்துவிட்டு,
ஒன்றமே தெரியாதது போன்று கடவுளைக் கும்பிட்டு,
சிலவேளை அதுவுமில்லாமல், வயிறாற உண்டபின் துயில் கொள்ளப் போவதா? - என்றால் இது நரகம்.
கடவுளிட்ட கட்டளை ஒன்றை இன்று கடைப்பிடித்துப் பாருங்கள் - வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று புரியும்.
சுயநலத்தை மறவுங்கள் - உண்மையான அன்பைப் பகிருங்கள்.
இதில் ஆரம்பியுங்கள் பார்க்கலாம் இன்று.
09.08.2022
ஒருவன் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும்
அவன் மனச்சாட்சிக்கு முன்னால் அவன் காலியே
நாளை என்ன என்று தெரியாத வாழ்க்கை
இப்போது காட்டும் வீம்பு, ஆணவம் அடுத்த வினாடி......?
உன் எதிர்கால வினாடிக் கணக்குத் தெரியாத மனிதன் நீ
இவ்வினாடி உனக்குக் கிடைத்த வரம்
நல்லாகத்தான் வாழ்ந்துதான் பாரேன்!
08.08.2022
அன்பைச் செலுத்திப் பார் - அது உடனே திரும்பவரும்
பணத்தைக் கொடுத்துப்பார் - போலிவதனங்கள் உன்னைக் கட்டியணைக்கும்
பகலில் கொல்லப்படும் மனச்சாட்சி
இரவினில் விழுத்தெழும்
அது குற்றம் புரிந்தவரை
குதறி எடுக்கும் வரை ஓயவே ஓயாது
நித்திரைக்குப் போகுமுன் நினைத்துப் பார் இன்று நீ செய்த
நன்மை, தீமை, புண்ணியம், துரோகம்....எல்லாவற்றையும்,
மனச்சாட்சி தட்டிச் சொல்பனவற்றை
என்ன செய்யப் போகின்றாய்?
பிழையென்றால் என்ன செய்வாய்?
இருக்கும் நேரமோ சொற்பம் - மன்னிப்பு கேட்டு திருந்துவதற்கு
ஏனென்றால், நாளை விடியலைக் காணுமா எம் கண்கள்?
வாழ்க்கையில் மனச்சாட்சியைப் பேச வைத்திராதே!
அப்படி அது பேசும் சூழ்நிலையை நீ ஏற்படுத்தியிருந்தால்,
என்றோ ஒருநாள் அது நரகத்தை உனக்குக் காண்பிக்கும்!
06.08.2022
வார்த்தையைத் தவறுபவன்
இருந்தென்ன, வாழ்ந்தென்ன?
நாம் விதைத்தது நல்லதோ, கெட்டதோ
எல்லாம் ஒருங்கிணைந்து உன்னைத் தேடிவரும்.
நல்லவை கூடிவந்தால் நம்மைப் படைத்தவனே கைகோர்ப்பான்
கெட்டவை கூடிவந்தால், காட்டாறு அள்ளுவது போல் ஆகிவிடும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தூரத்தையும் கவனமாய்க் கடப்போம்.
துரோகத்திற்கென துரோகிகள் பிறப்பதில்லை
உன்னோடே உள்ளவர்கள் இதற்கு விதி விலக்குமில்லை
உருக்கவே முடியாததொன்று என்றால்
அது மனிதனின் மனம்தான்
03.08.2022
பயத்தால் வரும் பண்போ பாதியிலே போய்விடும்
பிறப்பால் வரும் பண்போ இறப்பின் பின்பும் நிலை நிற்கும்
உண்மையாக வாழும் உன் வாழ்வை
எவர்க்காகவும், எதற்காகவும் நலிய விடாதே
31.07.2022
நீ கருவிலிருந்த காலத்தை நினைத்துப்பார்!
அது அரைகறையாகக் கலைந்திருந்தால் அல்லது கலைக்கப்பட்டிருந்தால்,
நீ இப்போது எங்கே சொல்!
எல்லாவற்றையும் விட்டுவிடு;
இறைஅருளை வாஞ்சையுடன் கேட்டுக்கொள்!
அரியதொரு சந்தர்ப்பம் இவ்வுலக வாழ்வு
ஒருகண சந்தோஷத்தையும் தொலைத்து விடாதே!
29.07.2022
எவரின் வாழ்க்கையைப் பார்த்து மனம் புழுங்காதே!
அது ஒரு நாள் மொத்தமாக உன்னைத் தேடிவரும், மாறாக,
மனதாலே வாழ்த்தி வாயாலே அன்பைச் சுவறவை
அவனியே உன்னை கைகூப்பி வணங்கும்.
உதரத்தில் உள்ள வன்மையான உன் ஏக்கம், ஒருநாள்,
உயிரையே குடித்துவிடும்; வன்மத்தை குறைப்போம்,
உள்ளத்தைச் சந்தோஷமாக வைப்போம்
வாழ்வு அப்போது செழிக்கும்.
28.07.2022
மனிதன் இறைவனின் படைப்பு - அவன் இறைவனின் சாயல்
அவனுக்கு தீங்கு செய்வதும், கேடு நினைப்பதும், அவையெல்லாம் இறைவனுக்கு செய்வதாகும்
மனிதனும் மன்னிப்பான் - இறைவனும் மன்னிப்பான்;
ஆனால், தீர்ப்பு மட்டும் இறைவனது;
26.07.2022
மனிதனை மதித்ததுப்பார் - அதனால்வரும் சுகம் சுகந்தமாகும்
மனிதனை மிதித்துப்பார் - அதனால்வரும் சாபம் அவலமாகும்
நான் இன்று செய்தவை சரிதானா என்று நீ நித்திரைக்குப் போகு முன்பு உன்னையே கேட்டுப்பார் - ஏனென்றால், இப்போது சரி செய்யவில்லை எனில் கடவுளின் முன் அதைச் சரி செய்ய முடியாது. நாளை விடியுமா என்று யாருக்கும் தெரியாது.
சிந்தனை தூய்மையாக இருந்தால் சன்மானம் இறைவனிடமிருந்து கொட்டோ கொட்டும்
உண்மையாக வாழும் உன் வாழ்வை வெளிக்கொணராதே!
அவ்வாழ்வு உன் ஆன்மாவைக் காப்பாற்றும், ஆனால், உன் உயிரையல்ல!
21.07.2022
பொறாமை மற்றவர் வளர்ச்சியைப் பார்த்து தளிர்ப்பது
பொறுமை மற்றவர் உன்னை வதைப்பதால் துளிர்ப்பது
கடமையைக் கண்ணியமாகச் செய்!
தவறின் அதுவே உனக்கு காலனாய் மாறிவரும்
ஏமாற்றி விட்டோமென உலகில் பெருமிதம் கொள்ளும்போது
உன் இறுதிநாள் கணக்கு எப்போது கூட்டப்படுகின்றதோ
அப்போது, உன் செயல்களே உனக்கெதிராய்ச் சாட்சி சொல்லும்
வாழ்க்கையிலே உயரத்தில் இருப்பாயானால், உயரத்திலேயே இருந்துகொள்;
ஆனால், நீ வீழ்ந்தாலோ அல்லது வீழ்த்தப்பட்டாலோ அந்த நிலையினில் உள்ள வலி உன்னால் தாங்க முடிந்தால்,
நீ உண்மையாக மனிதனாய் இருக்க முடியாது;
ஆனால் நீ, எல்லாப் பிறப்புகளுக்கும் மேல, மேலத்தான்.
அப்பவும் இந்த உலகம் உன்னைத் தள்ளிவிட கங்கணம் கட்டி நிற்கும்.
இறைவனை இறுக்கப் பிடி;
அவன் அணைப்பு உன்னைக் காத்து நிற்கும்.
அதுவோ, உன்மேல் காழ்ப்பணர்வு வைத்தவர்களைக் கதறவைக்கும்
தீங்கு, தீங்கு செய்தவரைத் தேடிவரும்
அது தீயைவிடக் கொடூரமாக உன்னை அழித்துவிடும்
ஆனால், நல்லவரைத் தீண்டா ஓடி விலகும்
மாறப்பார், உன் மனதை மாற்றப்பார்
07.07.2022
அன்பு உன்னுடம் இருந்தால்
பண்பு தானாக உன்னுள் குடி கொள்ளும்
உன்னை முழுதாக தெய்வத்திடம் கொடு
உன் வேண்டுதலைத் தெய்வம் தரும்
(அதற்காக செவ்வாய்க் கிரகத்தை எழுதிக்குடு என்று நினைவிலும் கேட்கக்கூடாது)
உன்னிடம் சொத்திருந்தால் மட்டுமே சொந்தங்கள் சூழ நிற்கும்.
இல்லையென்றால், நீ செத்தாலும் கண்ணீர் விட யோசிக்கும்.
உன்கடைசி நேரத்தில் சொந்தமெல்லாம் சுற்றிநிற்கும்
உன்னை மரியாதையுடன் வழியனுப்பவல்ல
உன்சொத்துகளை அள்ளிவாரிச் செல்வதற்கு
04.07.2022
இவ்வுலகப் பயணத்தில் தடைகள் வந்தால் சினம் கொள்வோம் நாம்
ஆனால், எமது,
இவ்வுலகமுடிவுப் பயணம் வரும்போது என்ன செய்வோம்? பயம்தான் கொள்வோம்
இச்சிறியகால வாழ்க்கையிலே, எத்தனை சோதனைகள், சோகங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்?
நாங்களே நடத்துகின்றோம் - உலகையே ஆதாயமாக்கலாமென்று
அடுத்த வினாடி நாம் இருப்பது நமக்குத் தெரியுமா?
வீம்பை விடு - மனிதனாய் வாழு - உன் வாழ்க்கை ஜொலிக்கும்.
01.07.2022
உள்ளவர் காட்டும் அன்புக்குதான் மவுசு அதிகம்
இல்லாதவரிடமிருந்து வரும் அன்போ கால் தூசியாக மிதிபடும்
உள்ளவரின் அன்பு போலியானது என்று தெரியவும் தெரியாது
இல்லாதவரின் அன்பு உண்மையானது என்று நினைக்கவும் வராது
30.06.2022
எவரும் அன்பொழுக்க கதைத்தால், நிதானமாயிரு;
எவரும் ஆசைதீரக் கதைத்தால், அவதானமாயிரு;
எவரும் தேனொழுக்க கதைத்தால், அனைத்தையும் சேர்த்து ஒன்றாய்ப் பாரு;
அப்போது தெரியும் கதைகளின் அர்த்தங்கள் என்னவென்று!
29.06.2022
நீ உறங்கப்போகுமுன்பு நன் மனதுடையவனாகப் போ
அதற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தித்துப் பார்!
ஏனென்றால், நாளை யாருக்கு விடியும்
யாருக்கு விடியாது என்று எவருக்கும் தெரியாது!
நாங்கள்தான் பிறப்போமென எவருக்கும் தெரியாது
எப்பதான் இறப்போமென அதுவும் புரியாது
எதுவுமே தெரியாத நமக்கு வாழ்க்கையில்
வீம்பு பண்ண என்ன உரிமைதானுண்டு!
28.06.2022
வருகின்ற வார்த்தைகளை நிதானமாகப் பாரு
இருக்கின்ற வாழ்க்கையினை கவனமாகக் காரு
உனது பெருந்தன்மை யாருக்கும் புரியாது
அது உன்னைப் பலவீனப்படுத்தும் ஆயுதமாகப் பாவிக்கப் பிறர் தவறவே மாட்டார்கள்
அதை நீ சுதாகரிக்காவிட்டால் உன் வாழ்க்கை சூறாவளியாகிவிடும்
தீயவர்களின் கூட்டும்
தீயசக்திகளுடன் வாழ்வதும்
மீண்டதாகச் சரித்திரமே இல்லை
அது நித்தமும் தரித்திரமே
27.06.2022
நீ எவ்வளவுதான் நன்மை செய்தாலும்,
அவர்கள் எவ்வகையான உறவாக இருந்தாலும்
உன்னைப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான்
துன்பத்தின் மேல் துன்பம் தரத்தான் செய்வார்கள்
அப்போது நீ என்ன செய்யப் போகின்றாய்?
நீ அவர்களாக மாறப்போகின்றாயா?
அல்லது,
அவர்களை உன்போல மாற்றப் போகின்றாயா?
26.06.2022
அன்பு செலுத்துவதில் தப்பில்லை.
ஆனால்,
அதை எங்கு செலுத்துகின்றோம் என்பதுதான் முக்கியம்
உண்மையை எப்பவும் தாரக மந்திரமாக்கு
இறுதியில் நிரந்தர வெற்றி உனதாகச் செய்யும்
24.06.2022
முகத்தைப் பார்த்து மயங்கும் மனசு
அகத்தைப் பார்க்கா ஒதுக்கும் வயசு
சுகத்தையே விரும்பி ஓடும் வாழ்வு
அனைத்தையும் காலம் மாற்றியே தீரும்
23.06.2022
வாழ்க்கை கிடைப்பது நமக்கு ஒருதரம்
வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழப் பழகிக்கொள்
நகரத்தில் வாழும் மனிதர்கள் பலரையும்
நரகமாய் மாற்ற சிலபேர் காணும்
வறுமையில் துவழும் வாழ்க்கையை ஒருநாள்
வாழ்ந்து பார்க்கணும் வையகம் முடியுமுன்
தப்பாய்க் கணக்கை எழுதி முடிப்பவன் கணக்கை
வைப்பாய் எழுதுவான் அவன் தலை எழுத்தை
22.06.2022
ஆசைகளை அடக்கி, அன்பினை அடைக்கலமாக வைத்துப் பார்!
அகிலமே பிரியாத நிழலாக உன்பின்னால் தொடரும்
மஞ்சள் கயிற்றுடன் மணவாழ்வு தொடங்கிடினும்
மனைவியின் வதனம் மனையினையே மிளிரவைக்கும்
இதுதான் வாழ்க்கையின் நிரம்பி வழியும் செல்வமாகும்
21.06.2022
ஏழையின் ஏப்பத்திற்கு சக்தியோ அதிகம்
அது துக்கித்தவரை துவட்டியெடுக்க விரைவில் எழும்
ஆசைகளை அடக்கி, அன்பினை அடைக்கலமாக வைத்துப் பார்!
அகிலமே பிரியாத நிழலாக உன்பின்னால் தொடரும்
18.06.2022
வாழ்த்துக்கள் நன்கு வருகிறதென்று கூடக் குதூகலிக்காதே!
வந்த இடத்தினை விடாமல் பாரு, வாழ்த்தின் அர்த்தம் அப்போது புரியும்
உறவுகள் உன்னைக் கூட நெருங்கினால்,
உன் காலடியைக் கவனமாகப் பார்த்துக் கொள்
வாழ்க்கையின் உயரத்தை அடைய ஆசை இருந்தால், முயற்சி மட்டும் போதாது. மனதினில் தொடர்ந்து அசையாத, குறையாத உறுதி வேண்டும்.
உடலின் அழகு மேன்மையாகும் போது
உள்ளத்தின் அழகு மாயையாகும்
நிலையற்ற இந்த வாழ்வுக்கு உரிமை கொண்டாடுகின்றோமே!
விலையற்ற அன்பு, பாசத்தை அனியாயமாகக் கொன்று புதைத்துவிட்டு!
16.06.2022
பாசம் என்பது உன் உணர்வுகளோடே ஒன்றாகி வரவேண்டும்
அதுவும் அதுவாகத்தான் ஊறவேண்டும்
ஏனென்றால், தொப்பிள் கொடியை வெட்டி, வெட்டித்தானே பிரசவிக்கிறார்கள்
ஒட்டி ஒட்டி பிறக்கவைக்கலயே!
நீ உன் வாழ்க்கையைத் தொடங்கமுன்
உன்னிடம் உள்ள அனைத்தையும் உடன் பிறப்புகளுக்குக் கொடு
போதாதென்றால், உனக்கு வருவதையும் கொடு
ஏனென்றால் அனைவரின் மனக்கசப்பும் உன் வாழ்க்கையையே நாசமாக்கிவிடும், மறவாதே
உனக்காக வாழ்பவர் உன்குடும்பத்தவர்கள்தான்,
உன் மனைவி பிள்ளைகள் தான்
அதுவே உண்மையானால், நீ இவ்வாழ்வில் பாக்கியவானே
இல்லையென்றால், நரகத்தை இங்கேதான் காண்பாய்
உனது எந்தக் கருத்தையும் கேட்காது எதிர்வாதம் ஒருவன் செய்வானாகில்
உன் கருத்தையல்ல, உன்னையே அவனுக்குப் பிடிக்கவில்லை என்று பொருள்
விதண்டாவாதம் செய்பவனுடன் உன்
வாழ்வின் நேரத்தை வீணடிக்காதே!
விலகித் தூரமாய்ப் போ!
15.06.2022
தீய ஆன்மா கொண்டவன் திருந்தவே மாட்டான்;
தீவினை சூழ்ந்து தீப்பிழம்பு அவனைச் சுட்டெரித்த போதும்.
14.06.2022
மனதினில் ஒன்றை வைத்து வாயால் ஒன்றைச் சொல்பவர் மனிதனின் சாயல் கொண்டவர்
மனதினில் நல்லதை நினைத்து வாயால் வாழ்த்து சொல்பவர் இறைவனின் சாயல் உடையவர்
இதில் நாம் எந்த ரகம்?
மனதில் உள்ளதைச் சொல்லிவிடாதே
மாயை உலகு உன்னை வாழவே விடாது
பகையாளியை மன்னித்துவிடலாம், ஆனால்,
உன்னோடு உறவாடும் உளவாளியை என்ன செய்யலாம்?
பொறாமை எப்பவும் பொறுமையாக இருக்காது
பொசுக்கிவிடும் உன்காலம் தள்ளாடும் போது
13.06.2022
உன்கண்ணீரைத் தானாகத் துடைப்பவர் மட்டில்
உன் கண்களைக் காத்திட கனவினில்ம் மறவாதே!
வாழ்க்கை எப்படி என்று
வாழ்ந்து கெட்டவனிடம் கேட்டுப்பார்
நீ வாழ்ந்த வாழ்க்கையை மறந்திருக்கலாம்
ஆனால், வாழ்க்கை உன்னை மன்னிக்காதபடி வாழ்ந்திடாதே!
அன்பை தானமாக்கிப் பார்
உலகமே உனக்குப் பானமாகும்
12.06.2022
நட்பை மதித்து கைகோர்த்து அகலக்கால் வைக்காதே
காற்றுப்போகும் இடையிலும் இடறவைத்தே தீரும்
இவ்வுலகைப் பொறுத்த மட்டில் நீ வனாந்திரத்தில்
நட்டப்பட்ட முளை அரும்பிய தாவரம்
உன் மனதை நன்றாக வைத்துக் கொள்
இறைவன் வாழும் ஆலயமாக ஆக்கிக் கொள்
நடுநிசியிலோ, கஷ்டங்கள் உன்னைச் சூழ்ந்து நசுக்குகையில்
கூப்பிட்டுப் பாரு எவரும் வரமாட்டார்
ஆனால், இறைவன் வருவான், உன்னைக் கட்டி அணைத்துக் கொள்வான்
ஒருக்கால் இவ்வாறு வாழ்ந்துதான் பாரன்...
இப்படித்தான் வாழப் போகிறேன் என்று சொல்லித்தான் பாரேன்
அப்போதுதான் உன்னை அன்டி உள்ளவர் யாரெனெத் தெரியும்
08.06.2022
ஒருவன் வாழ்க்கையில் நன்றாக வாழ்கிறான் என்று மனத்தில் புழுங்காதே
ஏனென்றால் புழுக்கத்தின் தாக்கத்தை தாங்க இயலாத காலம் உனக்குவரும். அப்போது தாங்க உனக்கு சக்தி இராது.
07.06.2022
ஓட்டைப் போட்டதால் நாட்டை ஆள்பவர்
காப்பார் என்ற அர்த்தமா என்ன?
வேட்டையாடத் தயாரானார் என்பதர்த்மாம்
மனிதன் எப்போ மனிதனை மதிக்கவில்லையோ
அப்போ வாழ்க்கை அவனை அழிக்கத் தொடங்கிற்று
நோகாமல் எடுத்த பணமோ
நோக்காடால் அழிந்தே தீரும்
வயோதிபரை வறுத்தெடுப்பவர் நிலைமை
வயோதிபம் வரும்போது தெரியும்
வாழ்க்கையை நொந்தோ பலனுமில்லை
வீழ்ந்தோமென நீ நோகத் தேவையுமில்லை
அடிவருடியவர் வாழ்வு தீயப்போவதை
ஆண்டவன் பொறுப்பில் விட்டுப்பாரு
05.06.2022
உடலில் பாரத்தைச் சுமப்பவனை விட
மனதினில் வாதையைச் சுமப்பவன் வலியோ அதிகம்
கண்களால் வரும் கண்ணீரைக் கண்டழுபவர்தான் உள்ளர்
மனக்கண்களின் அழுகையின் வலியைப் பாரா விலகுவர்
உருக்குப்போன்ற கோபமும், வெறுப்பும்
கரைந்திடும் கணமே நீ கதைத்திட்டவுடனே
30.05.2022
ஏழை வயிற்றின் குமுறல்
எரிமலைப் பிழம்பைவிட சக்தி மிக்கது
உயிரோடிருக்கையில் உன்னில் உள்ளன்பு இல்லாதவர் கண்ணீர்
உன் இறப்பிலே சொட்ட அவர்களைக் கிட்டவும் விடாதே!
உன்னுடன் பிறந்தவன் உரிமையை விட என்னத்தைக் கேட்டுவிட்டான்?
ஆனால், உன்னுடனே ஒட்டி, நோகாமல் உனை உறிஞ்சும் உடன்பிறப்பு, அட்டையைவிடத் துரோகியே!
25.05.2022
உலகை நீ படிக்க வேண்டுமா?
நல்லவனாக வாழ்ந்து பாரு
அனைவருக்கும் நல்லவனாக இருக்க வேண்டுமா?
கொடுத்துக் கொண்டே இரு....
உலகத்திலே நீ செய்யும் அன்பு, பெறுமதியற்றது.
நீ கொடுப்பது பணமாகவோ, சொத்தாகவோ இருந்தால் மட்டுமே உன்னுடன் தொப்பிள் கொடி உறவுகளும், ஒட்டி நிற்கும்.
அந்த தற்காலிகமான பந்தம் நீ கொடுப்பதன் மதிப்பைப் பொறுத்தது, ‘Pay as you go’ போல
24.05.2022
நிழல்கள் எப்போதும் கறுப்புத்தான். அதனுள் என்ன இருக்குமென்று எவருக்கும் தெரியாது.
உன்நிழலையும் கூடத்தான் - நம்பலாமா?
கருவறையினுள் வாழ்ந்த கள்ளமற்ற வாழ்வு
ஒருநாளும் மீண்டும் கிடைக்காது, எவ்வுயிர்க்கும் இவ்வுலகில்
23.05.2022
பிறப்போ ஒருதரம்தான்
இறப்போ பலதரம்
உருக்கிடலாம் உலோக உருக்கினை
உருக்கவே முடியாதது மனித உள்ளத்தினை
உலகத்தில் உன் நிலைமை என்னென்றறிய
உதவி ஒன்றைக் கேட்டுப்பார்....
பணத்திற்காகப் பேயாய் அலையும் இவ்வுலகம்
பிணத்தையும் விட்டுவைக்காத காலம் வெகுவில் வரும்
திருத்த வேண்டும் என்றொருவரை நீ நினைத்தால்
தவிர்க்க முடியாதது, நீ தீய்ந்து போவதனை
வாழ்க்கையில் நிமிர்ந்து நின்ரொருக்காய்ப் பார்
உன்மேல் விழும் அடிகளின் வழி தெரியும்; வலியாய் வலிக்கும்
22.05.2022
உண்மைகள் தூங்குவதில்லை
தூங்கினால் அவை உண்மையில்லை
உதட்டிலே வருவது உள்ளத்தின் நினைப்பு
முகத்திலே தெரிவது உள்மூச்சின் துடிப்பு
தூக்கம் இறைவன் கொடுத்த வரம்
தாக்கம் மனிதர் கொடுத்த ஜுரம்