
posted 5th January 2023
இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ள அஷ்ஷெய்க் - அல்ஹாபிழ் அல்ஹாஜ் எம்.எம். நயீமுடீன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா ஒன்று சம்மாந்துறையில் விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.
சாம்மாந்துறை மண்ணுக்கு இந்த நியமனம் மூலம் தனித்துவ பெருமை சேர்த்துள்ள செயலாளர் அஷ்ஷெய்க் நயிமுடீனுக்கு சம்மாந்துறை மண் எடுக்கும் பெருவிழாவாக 6 ஆம் திகதி (06.01.2023) இந்த விழா நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஸ்ஸூரா, மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த
பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல், சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெறும்.
முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவிற்கு வருகை தரும் செயலாளர் அஷ்ஷெய்க் நயீமுடீன் அவர்களுக்கு மக்கள் திரண்டு பெரு வரவேற்பளிப்பதுடன், விழாவில் ஊர்சார்பாகப்பாராட்டி கௌரவிக்கப்படவுமுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் அண்மையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக அஷ்ஷெய்க் நயீமுடீன் நியமனம் செய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு வாய்ந்த அமைச்சின் செயலாளராக முஸ்லிம் ஒருவர் இதன் மூலம் நியமனம் பெற்றுள்ளமை குறித்து பல தரப்பினரும் பாராட்டுதல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)