
posted 30th January 2023
“சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் 25 000 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் அரச ஊழியர்களின் பண்டிகைக் கொடுப்பனவு 20 000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்”
இவ்வாறு அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் சங்கத் தலைவரும், அக்கரைபற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதருமான “தேசமான்ய” யூ.எல்.எம். பைஸர் தலைமையில் நடைபெற்றது.
மாளிகைக்காடு பாவாறோயல் மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் மேலும் பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
- அஞ்சல் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள 3 ஆம் தரத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும்.
- உப அஞ்சல் அதிபர்களுக்கான அலகுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்.
- உப அஞ்சல் அதிபர்களுக்கு சனிக்கிழமை கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
- உப அஞ்சல் அதிபர்களுக்கான விடுமுறை ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்று வழங்கப்பட வேண்டும்.
- பைபர் வசதி வழங்கப்பட்டுள்ள அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களுக்கு அதற்கான பெற்றரி வழங்கப்பட வேண்டும்.
- சவளக்கடை உப அஞ்சல் அலுவலகம் புனர் நிர்மாணம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- கரடித் தோட்டம் உப அஞ்சல் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி தீர்மானங்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)