
posted 28th January 2023
இளம் குடும்பஸ்தரை மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரே அடித்துக் கொன்றுவிட்டு, வாள்வெட்டுக் குழு வந்து கொன்றுவிட்டதாக நாடகமாடியது பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இரவு கோப்பாய் மத்தியில் ரவீந்திரன் அஜித் (வயது 30) என்ற ஒரு பிள்ளையின் தந்தை கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், கோப்பாய் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடத்தினர். இதில், மனைவியும் அவரை சார்ந்த குடும்பத்தினருமே அஜித்தை கொன்றதாக தெரிய வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கொல்லப்பட்டவர் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மனைவியுடன் அவரின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், சீதனம் தொடர்பாக இவர்களுக்குள் ஏற்கனவே பிரச்சனை ஒன்று இருந்தது. கொலைக்கு முன்னர், இவருக்கும், இவரின் மாமனாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அஜித்தை வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். ஒரு மாதத்தில் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கொலை நடந்த அன்றைய தினம் அஜித் தோட்ட வெளியில் வரும்போது அவரை மாமனார் ஆள் வைத்து அடித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு மனைவியை கூப்பிட்டவாறு நொண்டியவாறு அஜித் வீட்டுக்கு ஓடியுள்ளார். வீட்டாரிடம் தன்னை அடித்தது யார் என்று தெரியும் என்று கூறி அழுதுள்ளார்.
அவர் பொலிஸில் சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் கதவு தாழ்பாள் (றீப்பை கட்டை), உலக்கை உள்ளிட்டவைகளால் அவரை தாக்கி குடும்பத்தினரே கொலை செய்துள்ளனர். பின்னர் தாங்களாகவே அம்புலன்ஸூக்கு அறிவித்துவிட்டு வாள்வெட்டுக் குழு வந்து அவரை வெட்டிவிட்டதாக பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வாள்வெட்டு குழு வீட்டை தாக்கியது போன்று தாங்களாகவே வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சம்பவத்தை திசை திருப்பியமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பொலிஸாரின் விசாரணையின்போது வாள்வெட்டு குழு வந்து அச்சுறுத்தியதால் தாம் வீட்டிலிருந்து ஓடிவிட்டதாகவும் கூறி நாடகமாடியுள்ளனர்.
பொலிஸாரின் புலன் விசாரணையில் இந்தக் கொலை திட்டமிட்ட நாடகம் என்பது தெரிய வந்ததுடன், தொலைபேசி அழைப்புகளையும் பரிசோதித்து கொலைக்கு உதவியவர், கொல்லப்பட்டவரின் மனைவி, மனைவியின் தாய், தந்தை உட்பட 9 பேரை நேற்று (27) வெள்ளி பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன், சான்று பொருட்களான றீப்பை தடி, இரும்பு கம்பி, உலக்கை என்பவற்றையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை விரைவில் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)