
posted 10th January 2023
உலகத்தமிழரின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்கு இலங்கை மக்களும் தயாராகி வருகின்றனர்.
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு இந்து மக்கள் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
கொவிட் பரவல் நிலமை காரணமாக கடந்த வருடங்களில் தைப்பொங்கல் பண்டிகை சோபிக்காத போதிலும் இம்முறை சிறப்புறக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மலையகம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொங்கலையொட்டிய வியாபார நடவடிக்கைகள் களைகட்டி வருகின்றன. குறிப்பாக பொங்கலுக்கான புத்தாடைகள் வியாபாரத்தில் ஜவுளி நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் அதேவேளை, பல்வேறு பிரதேசங்களிலும் உடுதுணிகள் வியாபாரத்தில் பெருமளவான அங்காடி வியாபாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய வர்த்தக நகரங்கள் மற்றும் பொதுச் சந்தைகளிலும் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் தற்பொழுது தமிழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இத்தகைய இடங்கள், நகரங்களில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதேவேளை பொங்கல் தினத்தையொட்டி பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார விழாக்களை நடத்துவதற்கு தமிழர் பிரதேசங்களிலுள்ள பல்வேறு அமைப்புகளும், விளையாட்டுக்கழகங்களும் தயாராகியும் வருவது குறிப்பிடத்தக்கது.
பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையிலும் இலங்கை மக்கள் இம்முறை சிறப்புற பொங்கல் தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.
பொங்கலோ, பொங்கல்!!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)