கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை 26.01.2023 நண்பகல் இடம்பெற்றது.

ஒருங்கிணைந்த தொழில் வல்லுனர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்றலில், பெருந்தொகையானோரின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

  • அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி வசூலிப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,
  • மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும்,
  • அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நீக்கவும் ஆவன செய்யப்படாமையைக் கண்டித்தும்

அரசுக்கு எதிரான இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன்,
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கறுப்பு உடைகள், கறுப்புப்பட்டிகள் அணிந்த வாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல் மருத்துவர் சங்கம், வைத்திய அதிகாரிகள் சங்கம் முதலானவற்றின் கல்முனை பிராந்திய கிளை உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை மற்றம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், பாவனையாளர்களது இணைப்பாளர் சங்கம் என்பவற்றின் உறுப்பினர்கள் பெருமளவில் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆரப்பாட்டம் இடம்பெற்ற வேளை மேற்படி அஷ்ரப் ஞாபகார்த்த முன்றலில் கறுப்புப் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்த அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், அரசுக்கு எதிராக குறித்த வியடங்கள் தொடர்பில் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

  • அசாதாரண வரிச்சீர்திருத்தத்தை உடன் நிறுத்த வேண்டும்,
  • நீதி வேண்டும்,
  • வெளியேற்றாதே, வெளியேற்றதே மூளை சாலிகளை வெளியேற்றாதே > அழிக்காதே அழிக்காதே எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே
  • நிறுத்து! நிறுத்து! ஊழலினை நிறுத்து
  • நிறுத்து! நிறுத்து! நியாயமற்ற கொள்கைகளை நிறுத்து,

எனவும்,

  • சாப்பிட ஒன்றுமில்லை,
  • குடிக்கவும் ஒன்றுமில்லை
  • நோயாளிக்கு மருந்தில்லை
  • ஆட்சியாளருக்கு அறிவில்லை
  • கட்டிய வரி கையைக் கடிக்க குறைந்த ஊதியம் வயிற்றை இறுக்க
  • ஊனமாகுதே மக்கள் சேவை உங்களுக்கோ ராஜ வாழக்கை

எனவும் ஆர்பபாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.

பிரதான வீதிகளுடாக ஆர்ப்பாட்டப் பேரணியும் இடம்பெற்றமையும் குறிப்பிட்டத்தக்கது.

கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)