
posted 3rd January 2023
புதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு திங்கட்கிழமை (02) கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
வினைத்திறன்மிக்க முகாமைத்துவம், நிலைபேறான அபிவிருத்தி, பொருளாதார மீட்சி போன்ற விடயங்களை கருப்பொருளாகக் கொண்ட இப்புது வருட சத்தியப் பிரமாண நிகழ்வில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் கே.எம். றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே. ஹலீம் ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ. வட்டபொல, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம். நௌசாத் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.
மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கும் ஏனையவர்களுக்கும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் தலைமையுரையாற்றுகையில்,
ஒரு குட்டி அரசாங்கமாக கருதப்படுகின்ற கல்முனை மாநகர சபையை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைப்பதற்கும், பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் எமது ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஏனைய நிறுவனங்கள் போலல்லாமல், உள்ளுராட்சி மன்றங்கள் சொந்த வருமானத்திலேயே நிர்வாக விடயங்களையும், சேவைகளையும் முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் மாநகர சபைக்குரிய வருமானத்தை திரட்டுவதில் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அதிக கரிசனையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு துணைபோகாமல், அவற்றுக்கு எதிராகவே ஊழியர்கள் செயற்பட வேண்டும் எனவும் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)