
posted 17th January 2023
அம்பாறை மாவட்டத்திற்கான பிரதான தைப்பொங்கல் திருவிழா, கல்முனை வடக்கு உப பிரதேச செயலக அணுசரனையுடன் கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எம். சங்கீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார்.
இதில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல். புத்திக்க, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், வைத்தியர் புஷ்பலதா லோகநாதன், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே. ஜெயராஜ் உள்ளிட்டோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இலங்கையின் தேசியக் கொடி, நந்திக்கொடி, தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் கொடி என்பன அதிதிகளால் ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நடனம் உட்பட தமிழர் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டிருந்தன. அத்துடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ. டக்ளஸ், இளைஞர் சேனை அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், இந்து மக்கள் மாத்திரமல்லாமல், மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது எனவும் மதங்கள், இனங்கள் வேறாக இருந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இத்தைப்பொங்கல் விழாவில் முஸ்லிம் பிரமுகர்களும் வர்த்தகர்களும் கலந்து சிறப்பித்தமை முக்கிய அம்சமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)