
posted 31st January 2023
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து வாக்குறுதியை நிறைவேற்றிய கனவான் அரசியல்வாதி மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆவார்.
இவ்வாறு மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கட்சியின் தவிசாளரும் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவித்தார்.
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக் கூட்டத்தில் அப்துல் மஜீத் தொடர்ந்து உரையாற்றுகையில்;
1994ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி கிழக்கிலும், வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மை முஸ்லிம் பிரதேசங்களில் மட்டும் இன்றி ஏனைய இடங்களிலும் போட்டியிட்டது. அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய 6 பிரதேச சபைகளில் ஒன்றிலேனும் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் என்று தலைவர் அஷ்ரஃப் பகிரங்க அறிவிப்பு ஒன்றை செய்தார்.
தேர்தல் முடிவுகளின் படி 265 வாக்குகளால் நிந்தவூர் பிரதேச சபையும்,92 வாக்குகளால் பொத்துவில் பிரதேச சபையும் தோற்கடிக்கப்பட்டன. கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றுவதில் எத்தகைய சலனமும் இன்றி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து கனவான் அரசியலை கடைப்பிடித்தவர் பெருந்தலைவர் அஷ்ரஃப் ஆவார்.
இலங்கை அரசியலில் 77ம் ஆண்டு முதல் 94ம் ஆண்டு வரை எதிர்க்கட்சியில் இருந்து வந்த லங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்த பெருமை முஸ்லிம் காங்கிரஸையே சாரும். 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அதே வருடம் நவம்பர் மாதம் 9ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் சந்திரிக்கா அம்மையாரை ஆட்சிக்கு கொண்டு வர முஸ்லிம் காங்கிரஸ் உதவியது. சந்திரிக்கா-அஸ்ரஃப் ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக அமைந்திருந்தது.
அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றியும் தலைவர் அஷ்ரஃப் உடைய அரசியல் ஆளுமை பற்றியும் சிலாகித்துப் பேசியிருந்தார்.. மட்டுமன்றி தென்கிழக்கு என்ற வார்த்தை பிரயோகத்தை பல தடவைகள் பயன்படுத்தி இருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் போது தென்கிழக்கு மாகாண சபை ஒன்று நிறுவப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை முன்கொண்டு செல்லப்படுகின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பது அதன் மையப் புள்ளியாகும்.
கடந்த 26ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தேசியத் தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் மன்னார் மாவட்டம் உட்பட கிழக்கில் பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் இழந்து நிற்கின்ற காணிப் பிரச்சனைகள் தொடர்பாகவும், முஸ்லிம் மக்களின் வாழ்விடம் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இன அடையாளம் கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற குரல் பௌத்த சிங்கள கடும்போக்கு வாதிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களின் கூக்குரலில் அச்சம் கொண்ட எம்மவரின் கட்சிகள் இரண்டு கட்சியில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்டன. இவர்களை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும்? முஸ்லிம் சமூதாயத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தி நிற்கும் முஸ்லிம் காங்கிரஸை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)