
posted 11th January 2023
நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் முதன்முதலாக இலங்கை தமிழரசுக் கட்சி மன்னார் மாவட்டத்துக்கான ஐந்து உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கட்சிகள் இத் தேர்தலில் குதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி முதல் கட்சியாக தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 11.01.2023 புதன்கிழமை காலை 11.40 மணியளவில் மன்னார் மாவட்ட்திலுள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் மற்றும் ஒரு நகர சபைக்குமான ஐந்து
உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமாக 1லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாவை கட்டுப்பணமாக மன்னார் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் மன்னார் மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலகரும், உதவி தேர்தல் ஆணையாளருமான திரு.வீ. சிவராஜாவிடம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சி கிளை தலைவருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் வந்த குழுவினர் இக் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)