அனுராதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்

அநுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை (6) தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்றபோது எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கும் கலந்து கொண்டார்.

இதன்போது அநுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையே பெரும்பாலானோர் அதிகம் வலியுறுத்தினர்.

துயர் பகிர்வோம்

போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்கள் அவற்றில் கட்சிக்கு வழங்கப்படும் வட்டார மற்றும் ஆசன ஒதுக்கீடுகள் என்பவற்றைப் பொறுத்தான ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர், இதுபற்றிய இறுதித் தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

பிரஸ்தாப தேர்தல் தொடர்பில் கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு மாவட்டம், புத்தளம் மாவட்டம், பதுளை மாவட்டம், குருநாகல் மாவட்டம், கம்பஹா மாவட்டம், புத்தளம் மாவட்டம், வன்னி மாவட்டம் போன்றவற்றிற்கான முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்புகளும் கட்சித் தலைவர் ஹக்கீமுடன் தனித்தனியாக இடம்பெற்றன. இவற்றிலும் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்எஸ்.தௌபீக் எம்.பி. கலந்துகொண்டார்.

அத்துடன், இந்தத் தேர்தல் குறித்தான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட நிருவாக உத்தியோகர்களுடனான கலந்துரையாடலும் வெள்ளிக்கிழமை(6) மாலையில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் முன்னிலையில் "கட்சியின் தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)