
posted 18th January 2023
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் காணி வழக்கொன்றுக்காக நீதிபதிக்கு முன்னிலையில் வீற்றிருந்த வேளையில் ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி பலத்த சத்தத்துடன் ஒலித்தமையால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் தண்டப் பணம் செலுத்தியச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
கடந்த செவ்வாய் கிழமை (17.01.2023) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் காணி வழக்குக்காக மன்றுக்கு நபர் ஒருவர் வந்திருந்தார்.
இவரின் வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இந் நபர் எதிர் தரப்பு பக்கம் முன்னிலையாகி விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தபொழுது திடீரென இவர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசி மன்றில் பலத்த சத்தத்துடன் ஒலித்தமையால் இவரின் தொலைபேசி உடன் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் இவரின் வழக்கு முடிந்த கையோடு பொலிசார் இவரை கைதுசெய்து நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டார்.
ஒருசில மணிநேரம் கழித்து இந் நபருக்கு எதிராக பொலிசார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது நீதிபதி அவருக்கு 1000 ரூபா அபராதம் விதித்ததுடன் நீதிமன்றுக்குள் வரும் போது நீதிமன்ற ஒழுங்கு முறைகளை கையாளப்பட வேண்டும் என்றும், அத்துடன் இனி நீதிமன்ற ஒழுக்க விதிகளை கையாளாது செயல்பட்டால் இவ்வாறான நிலை இடம்பெற்றால் தொலைபேசி கைப்பற்றப்படும் என தெரிவித்து கையடக்க தொலைபேசியை மீளவழங்குமாறும் நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)