மீற்றர் வட்டியால் மனித வதைப்பு - பிந்திய செய்தி இணைப்பும்

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொளி தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



பிந்திய செய்தி

எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க அவர்களை அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துக்கும், சுன்னாகம் கொலை முயற்சி மற்றும் வன்செயல்களுடனான தொடர்பில் சரணடைந்த மூவருக்கும் தொடர்பு உள்ளமை பொலிஸ் உயர்மட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த மீற்றர் வட்டி கும்பலுக்கும் சுன்னாகம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொலி அண்மையில் சமூக ஊடகங்களில் பிரபலமானது. இது தொடர்பில் வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதுக்கும் மேற்பட்ட காணொலிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டன.

இவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சுன்னாகத்தில் ஒருவரை கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மூவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இவர்கள், மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக் காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு வழங்கச் சென்றாலும் அவர் திருப்பி அனுப்பி விடுவார் என்றும் விசாரணைகளில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸ் உயர்மட்டத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மீற்றர் வட்டியால் மனித வதைப்பு - பிந்திய செய்தி இணைப்பும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)