
posted 19th January 2023
அம்பாறை மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த புதன்கிழமை (18) முதல் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக பெரும்பாலானோர் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகியுள்ள ஊர்ஜிதமற்ற தகவலை அடுத்தே திடீரென இந்த வரிசைகள் காணப்படுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்புவதற்காக நாடு முழுவதும் நீண்ட கியூ வரிசைகள் காணப்பட்டதுடன் மக்கள் பெரும் அவலத்திற்கும் உள்ளாகினர்.
இந்த வரிசை யுகம் மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் உட்பட பல பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தத்தமது வாகனங்கள் சகிதம் பொது மக்கள் கடந்த இரு தினங்களாக பெருமளவில் முந்தியடித்த வண்ணமுள்ளனர்.
இதேவேளை எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி இம்மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)