மன்னாருக்கு இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள்

கொவிட் காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளைவிட மன்னார் மாவட்டம் கொவிட் தடுப்பு மற்றும் முறியடிப்பில் சிறந்து விளங்கியமையால் மன்னாருக்கு ஏனைய இடங்களைவிட அதிக அதிதீவிர சிகிச்சை வசதிகளை உள்ளடக்கிய ஊர்தியை ஓட்டிச் செல்லக் கூடிய (வோர்ட்) நோயாளர் காவு வண்டி மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்மராஜன் வினோதன் தெரிவித்தார்.

இவ்வாறான வசதிகளைக் கொண்ட அம்புலன்ஸ் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (25) புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

பேசாலை வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி இம்மானுவேல் ஈற்றன் பீரீஸ் அவர்களிடம் வைத்திய கலாநிதி வினோதன் உத்தியோகபூர்வமாக அருட்பணி செ. டிசாந்தன் அவர்களுமாக இணைந்து அம்புலன்ஸைக் கையளித்தனர்.

இந் நிகழ்வில் வைத்திய கலாநிதி வினோதன் உரையாற்றுகையில்;

இலங்கை அரசின் மத்திய சுகாதார அமைச்சினால் கொவிட் நிவாரண நிதியத்தின் மூலம் 80 இவ்வாறான நோயாளர்கள் காவு வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

கொவிட் தடுப்பு , முறியடிப்பு நடவடிக்கைகளில் முழுநாட்டையும் பொறுத்தமட்டில் மன்னார் மாவட்டம் முன்னிலை வகித்த மாவட்டம் என்ற அடிப்படையில் மன்னார் மாவட்டத்துக்கு இரண்டு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே சுகாதார சேவையாளர்களின் சேவைக்கு இது எமக்கு ஒரு ஆசீர்வாதமாக கிடைக்கப் பெற்றிருக்கின்றபோதும் கிடைக்கப்பெற்றதை தகுந்த முறையில் நாம் பராமரித்துவர வேண்டும் என தெரிவித்தார்.

மன்னாருக்கு இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)