புதிய தவிசாளராக சுபைர் தெரிவு

ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக எம்.எஸ்.எம். சுபைர் திருவுளச்சீட்டு குலுக்கல் மூலமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

மேலும் இவர் சபையின் மூன்றாவது தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தவிசாளர் எம்.எஸ். நழீமினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வாண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர் பதவியிழந்தார்.

இதையடுத்து, உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமயில் புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது. இதன் போது எம்.எஸ்.எம். சுபைர் மற்றும் கே. இப்திகார் ஆகியோர் தவிசாளர் பதவிக்காக உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டனர்.

இம் முன்மொழிவு திறந்த வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது இருவருக்கும் தலா 8 வாக்குகள் கிடைக்கப்பெற்றதனால் திருவுளச்சீட்டு குலுக்கல் முறை பின்பற்றப்பட்ட நிலையில், முகமட் சரீப் முகமட் சுபைர் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ் சபையில் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர சபையில் அங்கம் வகிக்கும் 17 உறுப்பினர்களில் 16 பேர் மாத்திமே இதன்போது சபைக்கு சமூகமளித்திருந்தனர். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இரு அணியாகப் போட்டியிட்டதன் விளைவாகவே இச்சபையை சுமுகமாக நடத்திச் செல்ல முடியாத துரதிஷ்டநிலை காணப்படுவதாக புதிய தவிசாளர் சுபைர் தனது கன்னியுரையில் சுட்டிக்காட்னார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு கூடுதலாக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும் ஏனைய சிறப்பான சித்தி பெற்ற மாணவர்களையும் புதிய தவிசாளர் சுபைர் வாழ்த்தியுள்ளார்.

புதிய தவிசாளராக சுபைர் தெரிவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)