
posted 1st January 2023
கிழக்கு மாகாண புதிய கல்விப் பணிப்பாளராக செல்வி. அகிலா கனக சூரியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண கல்விப்பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய திருமதி. நகுலேஸ்வரிபுள்ள நாயகம் ஓய்வு பெற்றுள்ளமையை அடுத்தே புதிய பணிப்பாளர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கிலங்கையின் இரண்டாவது பெண் மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள புதிய பணிப்பாளர் செல்வி அகிலா, கிழக்கு கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுள் சிரேஷ்ட மாணவராவார்.
மட்டக்களப்பு மாவட்டம் குறு மண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட புதிய பணிப்பாளர் செல்வி. அகிலா கனக சூரியம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராகவும், மாகாண கல்வித் திணைக்கள திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளராகவுமிருந்து சிறந்த அனுபவம் கொண்டவருமாவார்.
பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான மாணிபட்டதாரியான இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நிருவாகத்திறனும், ஆளுமையும் கொண்ட மேலதிக பணிப்பாளர் புவனேந்திரன், இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியுமாவார்.
கல்முனை, சம்மாந்துறை கல்வி வலயங்களில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக் கடமையாற்றிய இவர், மூன்று வருடங்கள் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்புற கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)