
posted 29th January 2023
யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள்
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேலும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி. கனகசபாபதி, லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன் மற்றும் யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்நத வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம் ஆகியோரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குத் தலைவர் அறிவித்துள்ளார்.
29 வயது இளைஞன் படுகொலை
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் வியாழன் (26) வீதியில் சென்று கொண்டிருந்த வேளை போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்டனர். பின்னர் முரண்பாடு கைகலப்பாக மாறியது.
இதன்போது அவர்கள் இருவரும் சேர்ந்து குறித்த நபரின் தலை மீது கம்பியால் தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலில் உள்ளவர்கள் மூலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளி (27) உயிரிழந்தார்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இந்த படுகொலை குறித்து இருவர் நேற்று (28) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் 20 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த 30 நாள் சிசு
யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குழந்தை தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது.
புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் நேற்று வெள்ளிக்கிழமை (27) பால் குடிக்கும் போது திடீரென புரக்கேரியது. இதனை அடுத்து அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்தது. குழந்தை பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சனிக்கிழமை 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மாத நிலுவையா - மின்சாரம் கட்
யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்கள் ஒரு மாதத்துக்கு மேல் மின்சாரக் கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமையக பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள் இணைப்புக் கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேல் மின் துண்டிப்பு செய்யப்பட்டும் நிலுவைக் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
எனவே, மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவனையாளர்கள் உடனடியாக மின்சாரக் கட்டண நிலுவையைச் செலுத்தி மின்சாரத் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றிக்கு மிஞ்சி தன்னுயிரைத் துச்சமென உயிர் துறந்த இளைஞன்
கிளிநொச்சியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த வளர்ப்பு நாயை மீட்க முயன்ற இளைஞன், கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது.
வெள்ளி (27) காலையில் இந்த சம்பவம் நடந்தது.
கிளிநொச்சி, உதயநகர் மேற்கு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்தார். அவர் பெற்றோருக்கு ஒரே மகன்.
அந்த வீட்டிலிருந்த சுமார் 6 அடி விட்டமும், 30 அடி ஆழமும் கொண்ட மண் கிணற்றில் வளர்ப்பு நாய் விழுந்துள்ளது. நாயை மீட்க குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதன்போது, மெல்லிய தும்புக் கயிற்றை கட்டி 24 வயது மகன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

கயிறு அறுந்து, இளைஞன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதன்போது அவர் சேற்றில் சிக்கினார் எனக் கூறப்படுகிறது. எனினும், மேலிருந்து அனுப்பப்பட்ட மற்றொரு கயிற்றில் நாயை இணைத்து, மேலே எடுக்க உதவியுள்ளார். பின்னர் அவர் நீரில் தத்தளித்து, சேற்றில் புதையுண்டுள்ளார்.
இதையடுத்து, குடும்பத்தினர் அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து, கிணற்று நீரை வெளியேற்றி மேற்கொண்ட தேடுதலில் இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அரசுடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகள்
இந்திய மீனவர்களது மூன்று படகுகள் அரச உடமை ஆக்கப்பட்டுள்ளதாக நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளதுடன், மேலும் நான்கு படகுகளுக்கான கட்டளையை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டார்.
இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊற்காவற்றுறை நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (27) எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏழு படகுகளுக்கான வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல தடவைகள் உரிமை கோரும் வழக்கில் உரிமையாளர் முன்னிலையாகாத மூன்று படகுகள் அரச உடமை ஆக்கப்பட்டுள்ளதாக நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் படகுரிமை வழக்குக்காக தமிழகம், இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கொண்ட குழு முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது ஏழு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மூன்று வழக்குகள் அழைக்கப்பட்ட போது படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகவில்லை. பல தடவைகள் மன்றில் வழக்கு அழைக்கப்பட்டபோதும் உரிமையாளர் முன்னிலையாகி இருக்கவில்லை. இதனால் குறித்த மூன்று படகுகளும் அரசுடமையாக்கக் கட்டளையைப் பிறப்பித்தார் நீதவான் ஜே. கஜநிதிபாலன்.
மேலும், நான்கு படகுகளுக்கான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கின் சாட்சியாளர்களிடம் மன்றில் சாட்சியம் பெறப்பட்டது. சாட்சியை சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோசன் மன்றில் நெறிப்படுத்தினார்.
வழக்குத் தொடுநர் சார்பில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி ம. இராஜேந்திரன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
சாட்சியங்களை அவதானித்த நீதவான் குறித்த வழக்கின் கட்டளைக்காக எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு தவணையிட்டார்.
மேலும், மன்றில் முன்னிலையாகியிருந்த நான்கு படகுகளின் உரிமையாளர்களின் வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகுகளின் உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)