
posted 4th January 2023
மீன்களை திருடி விற்றவர்கள் பிணையில் விடுதலை
இந்திய மீனவர்களின் பெறுமதி வாய்ந்த மீன்களை திருடி விற்ற குற்றச்சாட்டில், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வடமராட்சி சமாசத் தலைவர் உள்ளிட்ட இருவரை இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றம் பிணையில் விடுத்தது.
கடந்த டிசம்பர் 29ம் திகதி இயந்திரக் கோளாறு காரணமாக, வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் ஒரு நாட்டுப் படகில் நான்கு மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.
குறித்த மீனவர் படகில் பெறுமதியான மீன்கள் இருந்துள்ளது. குறித்த மீன்களை திருடி விற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
1வது சந்தேகநபர் 30/12 வல்வெட்டித்துறை பொலிசாரினால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார், வழக்கை விசாரித்த நீதவான் ஒரு இலட்சம் ரூபா ஒரு ஆட் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
முதலாவது சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குறித்த மீன்களை எடுத்து விற்பனை செய்யுமாறு சமாசத் தலைவரே கூறினார் என தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வல்வைட்டித்துறை பொலிஸார் சமாசத் தலைவரை அவரது வீட்டிற்குச் சென்று அழைத்துள்ளனர். பொலிஸ் வாகனத்தில் வரவில்லை எனது மோட்டார் சைக்கிளில் வருவதாக கூறி சென்றவர், பொலிஸாருக்கு டிமிக்கி குடுத்து வேறு வீதியால் தப்பித்துச் சென்றுள்ளார்.
இரண்டு நாட்களாக தேடிய பொலிஸார் நேற்றுக்கு முன்னைய நாள் (02) 2வது சந்தேக நபரான வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவரை நேற்று (3) வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் சந்தேகநபரை 5000 ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் செல்ல உத்தரவிட்டார்.
மேலதிக அறிக்கையிடலுக்காக மே மாதம் 29ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகளின் ஆபத்து நிலைகளிருப்பின் உடனடி சட்ட நடவடிக்கை
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்து நிலைகள், கள தரிசிப்புக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன. யாழ் மாவட்டத்தில் கடந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 3421 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒன்பது மரணங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், 2022ஆம் ஆண்டின் ஒக்ரோபர், நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களிலேயே பருவப்பெயர்ச்சி மழையின் பின் யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் 231 டெங்கு நோயாளர்களும், நவம்பர் மாதத்தில் 306 டெங்கு நோயாளர்களும் மற்றும் டிசெம்பர் மாதத்தில் 633 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்பட்டுள்ள இந்த டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.
எனவே அனைத்து பிரதேசங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
எனவே இதனை கருத்திற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் 5ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்று நாட்கள் யாழ்.மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் சுகாதார உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர். பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுவாரியாக உள்ள அரச தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள், மற்றும்; மீன் பிடி துறைமுகங்கள் என்பனவற்றிற்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துள்ள இடங்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் பரிசோதிப்பதற்காக வருகை தருவர்.
எனவே உங்கள் வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை கிரமமாக பரிசோதனை செய்வதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும.; பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அரச தனியார் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் தமது நிறுவனங்களில் கூட்டு முயற்சியாக சிரமதான பணிகளை முன்னெடுக்கவேண்டும்.
மேலும் கைவிடப்பட்ட காணிகள், வீடுகள் என்பனவற்றின் உரிமையாளர்கள் அவற்றை துப்பரவாக பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்து நிலைகள், கள தரிசிப்புக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
டெங்கு நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய மரணங் களில் இருந்தும் எம்மையும் எமது சமுகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)