
posted 12th January 2023
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் தனித்து போட்டியிட்டாலும் எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் எந்தவித பிரிவினையும் கிடையாது. மன்னாரில் ஐந்து உள்ளுராட்சி மன்றைங்களையும் நாங்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
புதன்கிழமை (11) மன்னார் மாவட்டத்தின் ஐந்து உள்ளுராட்சி மன்றங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்காக மன்னார் தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியபின் ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில்;
நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நாங்கள் செலுத்தியுள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் 2023ஆம் ஆண்டு தேர்தல் முறை காரணமாக உள்ளுராட்சி தேர்தலில் மட்டுமே தாங்கள் தனித்து போட்டியிட எண்ணியுள்ளோம்.
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எந்தவித பிரிவினையும் இல்லை. உதாரணமாக கூறப்போனால் மன்னார் நகர சபையில் ஒரு வட்டாரத்தை தவிர ஏனைய வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி இருந்தது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையால் மற்றைய கட்சிகளின் ஆதரவுடனே எம்மால் ஆட்சி அமைக்க முடிந்தது.
இதன் காரணமாக எம் கட்சிக்குள் தனித்தனியாக போட்டியிடுவது எனவும் இதில் தெரிவு செய்யும் எமது தமிழ் கட்சிகள் பின் ஒன்றினைந்து ஆட்சி அமைப்பதும் எனவும் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே பாராளுமன்ற கட்டிடத்தில் பேசிக்கொண்டோம்.
நாங்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது கூட்டமைப்பின் மூன்று கட்சிகளிலிருந்தும் போட்டியிடுவோருக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றார்களோ அவர்களுக்கு வாக்களிக்கும்படியே தெரிவிப்போம். பின் நாங்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவருமான சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)