சுகிர்தராஜனின் நினைவுதினம்

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், கிழக்கு மாகாணத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 17 ஆவது நினைவு தினம் நேற்று (24) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந் நினைவுதின நிகழ்வில், அமரர் சுகிர்தராஜனின் உருவப் படத்திற்கு பங்குத் தந்தை அருட்பணி கந்தையா ஜெகதாஸ் மற்றும் ஊடகவியலாளர் எஸ். பிரகாஸ் ஆகியோர் ஒன்றிணைந்து மலர் மாலை அணிவித்தனர். அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள், பொதுமக்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பங்குத் தந்தை அருட்பணி கந்தையா ஜெகதாஸ், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் எஸ். சத்தியசீலன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன் மற்றும் எஸ். இராஜேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுகிர்தராஜனின் நினைவுதினம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)