
posted 31st January 2023
நாட்டில் நிலவிவரும் பொருளாதார சிக்கல் காரணமாக கொள்ளையர்கள் பொது இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டு கன்னமிடுவதால் திருக்கேதீஸ்வரம் வரும் பக்தர்கள் விலைமதிப்புள்ள ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என திருக்கேதீஸ்வரம் ஆலய செயலாளர் எஸ்.எஸ். இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ந் திகதி (18.02.2023) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்தாக எதிர்பார்க்கப்பட்டு இதற்கான ஆய்த்ததங்கள் இடம்பெற்று வருகின்றன.
சிவராத்திரி விழாவுக்கு வழமையாக நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் கடந்த காலங்களில் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு பெருந் தொகையான பக்தர்கள் கலந்துவந்த போதும் கடந்த ஏழு வருடங்கள் இவ் ஆலயம் புணரமைப்பு
வேலைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வந்தமையால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.
ஆனால் தற்பொழுது இவ் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளமையால் இவ் வருடம் சிவராத்திரி தினத்தன்று சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளமையால் கள்ளர் கூட்டமும் தங்கள் கைவரிசையை காட்டுவதற்கு முனைவர் என்பதும் எதிர்பார்க்கும் விடயமாக இருக்கின்றது.
ஆகவே இத் தினத்தன்று இவ் ஆலயம் வருவோர் விலைமதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு திருக்கேதீஸ்வர ஆலய செயலாளர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)