
posted 21st January 2023

கலாபூஷனம் ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர் - கிழக்கு மாகாணம்)
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இணைந்து இலங்கையில் இஸ்லாமிய கலைகளை பாதுகாத்து ஆவணப்படுத்தும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக இஸ்லாமிய மக்களின் கலைகளாக இலங்கையில் வழக்கில் இருக்கும் களிகம்பு எனப்படும் பொல்லடி, கஸீதா, பக்கீர் பைத் ஆகியவற்றை அறிமுகம் செய்யவும் ஆவணப்படுத்தவும் என மூன்று நூல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்வு ஒன்றின் போது குறித்த மூன்று நூல்களினதும் கௌரவ பிரதிகள் இரு முக்கியஸ்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் இந்த மூன்று நூல்களையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப், நிந்தவூர் கலை இலக்கியப் பேரவையின் உப தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், தேனாரம் கிழக்கு மாகாண செய்தியாளருமான கலாபூஷனம் ஏ.எல்.எம். சலீமிற்கும் வழங்கி வைத்தார்.
இந்த மூன்று நூல்களினதும் வெளியீட்டு விழா அண்மையில் அக்கறைப்பற்றில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.