
posted 26th January 2023
மன்னார் பாடல்தளமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவ் வருடம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ந் திகதி நடைபெற இருக்கும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற இருக்கும் இவ்விழா தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் புதன்கிழமை (25) கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய செயலாளர் திரு எஸ்.எஸ். இராமகிருஷணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின்போது கருத்து தெரிவிக்கப்படுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏழு வருடங்களாக இவ் ஆலயத்தில் புணரத்தான வேலைகள் இடம்பெற்றமையால் கோவிலில் பாலாலயம் அமைத்து வழிபாடுகள் நடைபெற்றன.
இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகமானது 2022 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம்பெற்றுள்ளமையால் வழிபாட்டிற்கும், கோவில் திருவிழாக்களிலும் பங்குகொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையாக இருந்தது.
எனவே, இவ் வருடம் வடக்கு பகுதியில் மட்டுமல்ல இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பதனால் சுமார் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகைதரலாம் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பக்தர்களின் சௌகரியங்களையும், பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளாக போக்குவரத்துக்கள், சுகாதாரம், அன்னதானம், தாகசாந்தி நிலையம், குடிநீர் போன்ற முக்கிய வசதிகளுடன் கூடியனவற்றை எவ்வாறு வழங்கமுடியுமென ஆராயப்பட்டதுடன், இதற்கான சகல நடவடிக்கைகளிலேயும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் கவனம் செலுத்த வேண்டும் என அரச அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் 17 ,18 , 19 ஆகிய திகதிகளில் ஆலய சூழலில் உள்ள நான்கு மடங்களிலும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், ஏழு இடங்களில் தாகச்சாந்திக்கான நிலையங்களும் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது கொவிட் அபாயம் இங்கு இல்லாமையால் பக்தர்கள் சுதந்திரமாக வந்து செல்ல முடியும் என சுகாதாரப் பிரிவினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)