
posted 4th January 2023
மக்களின் உன்னதமான ஜனநாயக உரிமையான தேர்தலை கேலிக்கூத்தாக மாற்றக்கூடாது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக செயலாளர் நாயகம் ஹஸனலி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தேர்தல்களை ஒத்திவைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருப்பதாக கசிந்துள்ள செய்திகள் உண்மையானால், வேட்புமனுக்களை மட்டும் இவ்வாரத்தில் ஏற்றுக்கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதானது மக்களை அலைக்கழித்து சோர்வடையவைக்கவே
மக்களை அலைக்கழித்து சோர்வடையவைக்கவே எனக்கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தையும், மக்களையும் அரசாங்கம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பிலிருந்து நழுவுவதானது வேட்புமனு தாக்கலுக்கும், தேர்தலுக்கும் இடைப்பட்ட காலவரையினை தமக்கு சாதகமான வகையில் நீட்டிக் கொள்வதற்காகவே ஆகும்.
அரசுக்கு எதிராக தேர்தல்களில் களமிறங்க முன்வருபவர்களை அப்பட்டமாக அடையாளம் கண்டு கொள்வதற்கான ஒரு கைதேர்ந்த உத்தியாகவே இதனை நோக்க இடமுண்டு. வேட்பாளர்களின் ஆர்வத்தைக் குறைப்பதற்கான மறைமுகமான ஒரு திட்டமாகவும் இது நோக்கப்படலாம். வேட்பாளர்களும், வாக்காளர்களும் அரசியல் பழிவாங்குதலுக்கு உட்படுவதற்கு இந்த நீண்ட இடைவெளி இடம்வகுக்கும் என்பதை எவராலும் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
கடந்துபோன பல மாதங்களின்போது நாட்டில் எதிர்கொண்ட பல வன்முறை சம்பவங்களையும், அடக்குமுறைகளையும், பிரளயங்களையும் கண்டு கதிகலங்கி நொந்து போயிருந்த மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முதலாவது சந்தர்ப்பமே இத்தேர்தலாகும். அவ்வாறான உன்னதமான ஒரு ஜனநாயக உரிமையானது ஒரு கேலிக்கூத்தாக மாற்றப்படக் கூடாது.
பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி பொருளாதார வாள்வாதார சிக்கல்களால் அல்லல்பட்ட மக்கள் மீது நீண்ட இடைவெளியுள்ள தேர்தல் காலமும் இன்னுமொரு மேலதிக சுமையாக வந்து சேராமல் இருக்க இடமளிக்கக் கூடாது.
எனவே, வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் அதன் சட்டத்தின் பிரகாரம் தீர்மானிக்கும் தினத்தில் தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருக்குமானால் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளுவதற்கான பணிகளையும் கூட அதற்கேற்றவாறு பிற்படுத்துவதே பொருத்தமாகும் என்பது எமது கசப்பான அபிப்பிராயமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)