
posted 30th January 2023
“அஞ்சல் திணைக்களத்திலிருந்தே, கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் பதவியைப் பொறுப்பேற்று வந்துள்ளேன். எனவே குறைகள், பிரச்சினைகளை எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் தீர்த்து வைக்க வழிவகுப்பேன்”
இவ்வாறு கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமல சூரிய கூறினார்.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சங்கத் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் தலைமையில், மாளிகைக்காடு பாவா றோயல் மண்டபத்தில் இந்த வருடாந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் உப தலைவர் ஏ.எம். அமீரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான கூட்டத்தில், சங்கச் செயலாளர் எம்.ஜே.எம். சல்மான் கடந்த வருடாந்த பொதுக் கூட்ட அறிக்கையையும், கூட்டத்தில் சமர்ப்பித்ததுடன், வருடாந்த கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர், எஸ்.ஆர்.கே. ஜாகொட, முன்னாள் பிரதி அஞ்சல் அதிபதியும், வாழைச்சேனை பிரதேச செயலாளருமான திருமதி. ஜெயானந்தி திருச் செல்வம், தபால், தொலைத் தொடர்பு ஊழியர் சங்கத் தலைவரும், ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளருமான சிந்திக பண்டார மற்றும் சக அஞ்சல் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்த்தர்களும் கௌரவ, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமல சூரிய தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“அஞ்சல் திணைக்களத்திலிருந்து பல்வேறு அனுபவங்களையும், ஆற்றல்களையும் கொண்டவனாகவே கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபதி பதவியைப் பொறுப்பேற்றுள்ளேன்.
இதனால் நமது அஞ்சல் குடும்ப உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் குறைகளையும், பிரச்சினைகளையும் தெளிவுறப் புரிந்துள்ளேன்.
எனவே, குறைகள், பிரச்சினைகளை எனது கவனத்திற்குக் கொண்டுவரும் பட்சத்தில், அவற்றைத்தீர்த்து வைப்பதற்கு வழிவகுப்பேன்.
இந்த வகையில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும். குறிப்பாக அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் போன்ற தொழிற் சங்கங்களின் ஆதரவும், ஒத்துழைப்புடன் கூடிய ஆலோசனைகளும் கிடைக்குமிடத்து உயரிய சேவைகளை நாம் ஆற்ற முடியும்.
நாடு பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், முடிந்த வரை எம்மிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி சிறந்த சேவைகளை முன்னெடுப்போம்” என்றார்.
கூட்டத்தில் உரையாற்றிய அதிதிகள் பலரும், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஆக்கபூர்மான சிறந்த செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், இந்த தொழிற் சங்கத்தை ஸ்தாபித்து இன்று நாட்டின் முன்னணி தொழிற்ச சங்கமாக வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றிவரும் சங்கத் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸரையும் வியந்துபாராட்டினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)