கதவு திறந்தே உள்ளது

“சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற எவரும், இக்கட்சிதான் தாய் வீடு என்ற நம்பிக்கை விசுவாசத்துடன், மீண்டும் இணைந்து கொள்ள, வரவிரும்பினால் அதற்காக கட்சியின் கதவு திறந்தேயிருக்கின்றது” இவ்வாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துகொள்ளும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வாழைச்சேனை காவத்த முனையிலுள்ள விருந்தனர் விடுதி ஒன்றில் மேற்படி ஒன்றிணையும் நிகழ்வு இடம்பெற்றது.

துயர் பகிர்வோம்

தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்.

“முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நானாக எவரையும் கட்சியிலிருந்து இதுவரை வெளியேற்றவில்லை. துரதிஷ்ட வசமாக கருத்து முரண்பாடுகள் அல்லது வேறு நிலைப்பாடுகளால் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலர் வெளியேறியிருக்கலாம்.

The Best Online Tutoring

ஆனாலும், தாய்வீடு முஸ்லிம் காங்கிரஸ்தான் என்ற விசுவாசத்துடனும் கட்சியைப் பலப்படுத்தும் நோக்குடனும் மீண்டும் கட்சியுடன் இணைய முன்வருபவர்களை நாம் என்றும் வரவேற்கத் தயாராகவுள்ளோம்.

அதற்காக முஸ்லிம் காங்கிரஸின் கதவு எப்போதும் திறந்தேயிருக்கும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால முக்கியஸ்த்தரான ஹிஸ்புல்லா மீண்டும் கட்சியுடன் இணைந்து கொள்வது கட்சிக்குப் பலமாக அமையுமென்பதுடன், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் மகிழ்ச்சி தரும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா கருத்து வெளியிடுகையில், எமது தாய் வீடான முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்து கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் தலைவர் ஹக்கீமுடன் தோள் நின்று செயற்படவுள்ளமை குறித்தும் மகிழ்வடைகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸை விட்டும் நான் பிரிந்து நின்ற கால கட்டத்தில் கட்சியொன்றை ஸ்தாபித்து தலைமை தாங்குமாறு பலர் என்னை வற்புறுத்தியும் அதனை நான் ஏற்று செயற்படவில்லை.

மேலும் மேலும் கட்சிகளாகப் பிரிந்து முஸ்லிம் சமூகத்தைக் கூறு போட நான் ஒருபோதும் விரும்பவில்லை.

இன்றைய மீள் இணைவு எனது அரசியல் வாழ்வின் இறுதிவரை தொடர்வதுடன், சமூகத்தின் முக்கிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட தலைமையோடு தோள் நிற்பேன்” என்றார்.
முஸ்லிம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் இணைவு குறித்து பலரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

கதவு திறந்தே உள்ளது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)