
posted 20th January 2023
கிழக்கு மாகாணத்திலுள்ள - முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸே கைப்பற்றும் என முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் - திட்டமிட்டபடி நடைபெறுமாயின் முஸ்லிம் காங்கிரஸின் அபரிதமான வெற்றி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.
முஸ்லிம் காங்கிரஸ் - எமது தாய்க் கட்சி. அந்தக் கட்சி மட்டும்தான் முஸ்லிம்களின் கட்சி என்பதை உணர்ந்த பலர் இன்று மீண்டும் கட்சியோடு மீளிணைந்து வருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். பல விட்டுக்கொடுப்புக்களுடன் கட்சியை பலப்படுத்தி வருகின்றார்.
கல்முனை மாநகர சபை தேர்தல் விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் - கல்முனை மாநகர முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் - மாவட்டத்தின் ஏனைய சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் கரிசனையோடு செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை கட்சித் தலைமைக்கும் எனக்கும் பூரண நம்பிக்கை உண்டு.
முஸ்லிம்களின் கட்சி என்று தம்மைத்தாமே மார்தட்டிக்கொள்ளும் ஓரிரு கட்சிகள் - இன்றைய சூழ்நிலையில் வலுவிழந்து - உட்பூசல் அதிகரித்து, வேட்பாளர் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் - அக்கட்சிகள் மீது - அக்கட்சிகளின் போராளிகளே அதிருப்தியடைந்த நிலையில் இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் - முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே பூரணமாக வேட்பாளர்களை நியமித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.
எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகளை கைப்பற்றுவது மட்டுமன்றி, மட்டக்களப்பிலும் மற்றும் திருகோணமலையிலும் இச்சாதனை நிலை நாட்டப்படும் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துகிறேன் என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)