
posted 20th January 2023
முஸ்லிம் திருமண சட்டத்தில் நான் தலையீடு செய்யமாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்றிருப்பதுடன் இது ஏனைய அரசியல்வாதிகளுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் திருமண சட்டத்தில் எந்தவொரு திருத்தமும் கூடாது என கடந்த பத்து வருடங்களாக எமது கட்சி மட்டுமே வலியுறுத்தி வருகிறது.
அமைச்சர்களாக இருந்த, இஸ்லாமிய சட்டம் தெரியாத சில முஸ்லிம் அமைச்சர்கள் கூட முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என்றதுடன் அதில் தலையீடும் செய்து வந்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்று பெரிதும் நிம்மதியை தருகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என தலையீடு செய்து அதற்கென ஒரு கமிசனையும் நியமித்து அநியாயத்துக்கு அரச பணத்தை வீணடித்தார். கடைசியில் இறைவனின் கோபப்பார்வையில் சிக்கி சீரழிந்தார்.
ஆனால் இன்றைய ஜனாதிபதி அவர்கள் இது விடயத்தை நன்கு புரிந்து இது விடயத்தில் தலையீடு செய்யமாட்டேன் என கூறியுள்ள தைரியத்தை நாம் பாராட்டுவதுடன் இந்த கருத்தை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போன்றவர்களும் ஏற்று முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தும் தேவையற்ற முயற்சியை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)