இனியும் அனுமதிக்க முடியாது

முஸ்லிம் சமூகம் இனத்துவ அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக பதவி வகித்து வந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகவும், கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் தான் நியமிக்கப்பட்டுள்ள ஜெமீல் தனது அரசியல் மாற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

முஸ்லிம் சமூகம் இன ரீதியிலான அரசியலை முன்னெடுத்து, அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர், முஸ்லிம் அடையாள அரசியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயுள்ள தலைமைகள் இங்கு வந்து, இனவாதம் பேசி, மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை சூறையாடி, இனவாத அரசியல் செய்தமையால் சமூகம் இதுவரை அடைந்த நன்மைதான் என்ன என்று நாங்கள் கேட்க வேண்டியுள்ளது.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனை சுயமதிப்பீடு செய்து கொள்ளத் தவறுவோமாயின் எமது சமூகம் இன்னும் பாரிய விளைவுகளயே சந்திக்க நேரிடும் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினை தலை தூக்கிய கால கட்டத்தில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் சமூகத்தின் தேவை கருதி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி, அதில் வெற்றியும் கண்டார்.

ஆனால் அவரது அந்திம காலத்தில் இனத்துவ அரசியலை தொடர்ந்தும் முன்னெடுப்பதானது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்ற தூர நோக்கு சிந்தனையுடனேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பதிலீடாக நுஆ எனும் தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்து, தேசிய அரசியலைத் தொடக்கி வைத்திருந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகமானது இனத்துவ அரசியலை விடுத்து, தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் இன்னும் வெகுவாக உணரப்படுகிறது.

தேசிய ஐக்கியம், சகவாழ்வு என்பவற்றின் ஊடாகவே ஏனைய இனங்களுக்கு நிகராக முஸ்லிம் சமூகமும் சமத்துவ உரிமைகளுடன் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதையும் எமது இளம் தலைமுறையினரின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்பதையும் நான் திடமாக நம்புகிறேன்.

இது இவ்வாறிருக்க தற்போதைய சூழ்நிலையில், அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்ற நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக் கூடிய வல்லமை ஐ.தே.க. தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே இருக்கிறது என்கிற யதார்த்தம் உணரப்பட்டதனாலேயே பாராளுமன்றத்தினால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இவற்றை கருத்தில் கொண்டே சமூகத்தின் நலன் கருதியும் கிழக்கு மாகாண அபிவிருத்தியை இலக்காகக் கொண்டும் நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து ஐக்கிய தேசியக் கட்சியில் எனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

குறிப்பாக ஐ.தே.க. முக்கியஸ்தர்களான தயா கமகே, அனோமா கமகே போன்றோருடன் சேர்ந்து, இனப்பாகுபாடுகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்தையும் முழு கிழக்கு மாகாணத்தையும் கட்டியெழுப்புகின்ற ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் அடிப்படையிலேயே கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தி ஜீவிகள் அமைப்பான United Professional Forum என்கிற ஐக்கிய தொழில்வான்மையாளர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகவும், கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பதுடன் கல்முனை மாநகர சபைக்கு முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடுகிறேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இனியும் அனுமதிக்க முடியாது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)