
posted 12th January 2023
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் நடைபெற்றது.
கழகத்தின் ஸ்தாபகரும் தவிசாளருமான கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பெஸ்டர் ஏ.எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளர் டாக்டர் முஹம்மட் றிஸான் ஜெமீல் கௌரவ அதிதியாகவும், கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்ஷீன் பக்கீர், பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஏ. வாஹித், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஷீரா றியாஸ் உள்ளிட்டோர் விஷேட அதிதிகளாகவும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கழகத்தின் உத்தியோகபூர்வ ரீ சேர்ட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் கழக அங்கத்தவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
கழகத்தின் தலைவர் ஏ. டபிள்யூ.எம். ஜெஸ்மியின் ஒருங்கிணைப்பிலும், பொதுச் செயலாளர் அப்துல் ஐப்பார் சமீமின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் முக்கிய அம்சமாக கழக அங்கத்தவர்களின் துவிச்சக்கர வண்டி மெல்லோட்டமும் இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)