
posted 8th January 2022
ஏப்ரலில் மாகாண தேர்தலை இலக்கு வைத்தே 5,000 ரூபா!
எதிர்வரும் ஏப்ரலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலேயே 5000 ரூபா நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அரச வருமானம் அதிகரிக்கப்படாத நிலையில், பணத்தை அச்சிட்டு இவ்வாறு நிவாரணம் வழங்குவது பொருளாதார அழிவுக்கே வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
பணத்தை இவ்வாறு அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்பட்டு, அது பொருளாதாரத்தில் மேலும் பல தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகளை அரசு கண்டறியவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கிளிநொச்சியிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் வியாழக்கிழமை (06) எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் 06.01.2022 பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திடீரென வெடிப்புச் சத்தம் கேட்டதையடுத்து வீட்டிலிருந்து வெளியில் ஒடிவந்ததாகவும், பின்னர் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் அந்த வீட்டில் இருந்த பெண்மணி தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் தடயவியல் பொலிஸாரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டனர்.
யாழில் பொருள் வினியோகம் தொடர்ந்து கிடைக்கும் - அ . ஜெயசேகரன்
யாழ்.குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ்.வணிகர் கழகத் தலைவர் அ. ஜெயசேகரன் தெரிவித்தார்.
யாழ்.வணிகர் கழகத்தில் இன்று (08) மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் நாட்டில் படிப்படியாக சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்தந்த நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியதன் காரணமாக பால்மா, எரிவாயு சிலிண்டர், கோதுமை மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புகள் காரணமாக மீளப்பெறப்பட்டு அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 60 - 70 வீதமான கோதுமை மா விநியோகம் தற்போது சீராகிவருகிறது.
பாண் மற்றும் பணிஸுக்கு மாத்திரம் போதுமான அளவு கோதுமை மா வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பால்மா விநியோகமும் இந்த மாத இறுதியில் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நெல்லின் விலை அதிகரித்ததால் உள்ளூர் நாட்டரிசி 160 ரூபா வரை விற்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசி 130 - 140 ரூபா வரையும் கீரிசம்பா 190 - 200 ரூபா வரை விற்கப்படுகின்றது. உள்ளூர் அரிசிகளின் விலை தைப்பூசத்துக்கு பின்னர் சற்று குறைவடையும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
15 - 20 ரூபா வரை இந்த விலை இறக்கம் ஏற்படலாம். ஆனால் நெல் உற்பத்தியில் உரத் தட்டுப்பாடு, மழையின்மை போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது.
நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. உளுந்து, பயறு,எள்ளு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்ச் செய்கைகளில் விவசாயிகள் ஈடுபடவேண்டும். அரசாங்கம் உழுந்தை தடை செய்துள்ள நிலையில் எல்லோரும் உழுந்தை அதிகளவில் உற்பத்தி செய்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது.
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றார்.
திருமலை எண்ணெய் குதங்கள்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை (06) மாலை கைச்சாத்திடப்பட்டது.
திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் ரேமினல் லிமிட்டெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரொனாவால் மரணம் அப்டேற் (07.01.2022)
இலங்கையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15112 ஆக அதிகரித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட பெண்ணின் சடலம்
முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை - பூதன்வயல் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இவ்வாறு சடலமாக அடையாளம் கணப்பட்டவர் லோகராசா - ராஜினி (வயது-39) என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் நான்கு நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதவள சிங்கன் குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பூதன்வயல் பகுதியில் ஆட்களற்ற தென்னந் தோட்டக் காணி கிணறு ஒன்றில் சடலமாக இன்று சனிக்கிழமை காலை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இனியும் வழக்குகள் எனக்குக் கிடைக்கும்
தான் எதிர்காலத்தில் தொடர்ந்து ஒரு சட்டத்தரணியாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்ற எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் வியாழக்கிழமை (06) முதன்முறையாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் சென்றிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைகழகம் மற்றும் தொலைதொடர்பு கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய சுசில் பிரேமஜயந்த கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய பதவி நீக்கப்பட்டார். சிரேஷ்ட சட்டத்தரணியாக அவர், இனி தான் சட்டத்துறையில் பணியாற்றும் போவதாக கூறியிருந்தார்.
“எமது கனிஷ்ட சட்டதரணிகள் நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளனா். நான் தொடர்ச்சியாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்ற எதிர்பார்த்துள்ளேன். ஒரு வருடமும் 3 மாதமும இராஜாங்க அமைச்சராக பணியாற்றினேன். தற்போது நீதிமன்றம் வந்துள்ளேன். ஆகவே எதிர்காலத்தில் இதற்கு முன்னா் இருந்த வழக்குகள் கிடைக்கும்” என்று ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House