தவிசாளராக எம்.ஐ.எம். இஸதீன் மன்னார் பிரதேச சபைக்கு ஏகமனதாக தெரிவு
தவிசாளராக எம்.ஐ.எம். இஸதீன் மன்னார் பிரதேச சபைக்கு ஏகமனதாக தெரிவு

எம்.ஐ.எம். இஸதீன் (தவிசாளர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை தற்பொழுது இச் சபையின் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசம் திரும்பியுள்ளது. மன்னார் பிரதேச சபை உப தலைவராக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் மன்னார் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் 2022 வது ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தொடர்பாக 27.12.2021 அன்று இதன் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் விஷேட சபை அமர்வு இடம்பெற்றிருந்தது.

அக் கூட்டத்தில் செயலாளரினால் வரவு செலவு அறிக்கை வாசிக்க முற்பட்டபோது இவ் வரவு செலவு அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பிரேரனையை கொண்டு வந்தபொழுது அதை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்ததைத் தொடர்ந்து அப்பொழுது தமிழரசுக் கட்சியை சார்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த தலா ஒருவரும் மொத்தம் 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்துக்கு எதிராகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுபினர் தலா ஒருவரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக மொத்தம் 10 உறுப்பினர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து எதிராக ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில் இவ் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதன்கிழமை (12.01.2022) வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இடம்பெற்றது.

இத் தேர்தலின்போது 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தேர்தல் விதிமுறைகளை தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து தேர்தலில் நிற்பவர்களின் பெயர்களை முன்மொழிய வேண்டிக் கொண்டார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஐ.எம். இஸதீனை அதே கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஜெ .இன்சாப் தவிசாளராக முன்மொழிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் வழிமொழிய அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஐ.எம். இஸதீனை தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்துள்ளனர்.

புதிய தவிசாளர் கடந்த காலங்களில் உப தவிசாளராகவும் இருந்ததுடன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்த வேளையில், மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான தேர்வு 29.09.2021 அன்று இடம்பெற்றபோது இத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீனும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் ஜெ.ஈ.கொன்சன் குலாஸூம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் ஆகியோர் தவிசாளருக்கான போட்டியில் இறங்கியிருந்தனர்.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புடன் அதிகபடியான வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இருந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எஸ்.எச்.எம்.முஜாஹிர் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய மீண்டும் தவிசாளராக பதவியேற்றதும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸதீன் தனது புதிய பொறுப்பில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறன நிலையில் புதன்கிழமை (12) இடம்பெற்ற மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்படடிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந் நிகழ்வின்போது பலத்த பொலிஸ் பாதகாப்பு போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தவிசாளராக எம்.ஐ.எம். இஸதீன் மன்னார் பிரதேச சபைக்கு ஏகமனதாக தெரிவு

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House