சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் மக்களுக்கான தியாகம் அவரிடம் குடிகொண்டிருந்தது - மன்னார் ஆயர்
சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் மக்களுக்கான தியாகம் அவரிடம் குடிகொண்டிருந்தது - மன்னார் ஆயர்

மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

யுத்தக்காலத்தில் மக்கள் அனைவரும் அனுபவித்த உயிர்ப் பயம் நிறைந்த வாழ்க்கையினை மறக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையிலே சேவைக்காக தம்மை அர்ப்பணித்து வந்த துறவியில் ஒருவர்தான் எமது மேரி பஸ்ரியன் அடிகளார். தத்தமது சொந்த வீடுகளிலே இருக்க முடியாத சூழ்நிலையில் வங்காலைப் பங்கு மக்களுக்கு சேவகராக இருக்கையிலே அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார். இன்றும் அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரை எம்மால் மறக்க முடியாத நிலைக்குக் காரணம் அவரின் தியாகம் நிறைந்த அன்பு, மக்களுக்கான பராமரிப்புத் தன்மை, இன்னும் பல என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை பங்கில் பணியாற்றும்போது சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 37 வது ஆண்டு நினைவேந்தல் தினம் வியாழக்கிழமை (06.01.2022) வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் அவ்வூர் மக்களால் நினைவு கூறப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் ஆயர் இங்கு ஆற்றிய உரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்;

அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றி இங்கு பங்கு தந்தை மற்றும் அவரின் மரணத்தை கண்ணால் கண்டவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

நான் வங்காலை வாழ் மக்களுக்கு மிகவும் நன்றிகூற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். ஏனென்றால், அவர் மறைந்து 37 வருடங்களாகியும் நீங்கள் மறக்காது ஒவ்வொரு வருடமும் அவரை நினைவு கூர்ந்து நினைவேந்தல் நிகழ்வை செய்து அவரின் ஆனமாவுக்காக மன்றாடி வருகின்றீர்கள்.
நான் அவரை சந்தித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைக்கப்பெற்றது எனக்கு ஒரு பாக்கியமே என்று இப்போது கருதுகின்றேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

இவர் திருச்சிராப்பள்ளி குருமடத்தில் கல்வி கற்றபோதும், பின் இளம் குருவாக அவர் திகழ்ந்தபோதும், அவர் மன்னார் மறைமாவட்டத்தில் பணிபுரிந்த காலத்திலும் நான் அவரை நன்கு அறிவேன். அவர் துடிதுடிப்பான ஒருவராக அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தார் என்பதும் எனக்கு நன்கு தெரியும்.
மன்னார் மறைமாவட்டம் ஆரம்பமாகி இவ்வருடம் 41 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இம் மறைமாவட்ட ஆரம்ப காலத்திலேயே அவர் பணி இப் பங்கில் தொடங்கியுள்ளது.

எனவே, அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் மக்கள் செபிக்கும் தன்மையில் அவர் இறைபதம் அடைந்திருந்தால், நிட்சயம் அவர் மோட்சத்தில் இறைவனுடன் இருப்பார். அவருடைய சிறப்பு, தியாகத் தன்மைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவர் மக்களுக்காக இறைவனிடம் இன்றும் பரிந்துரைப்பாரென்றால் அவருக்கு புனிதர் பட்டம் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்போம். இவருடைய வாழ்க்கை சரிதையை நான் அதிகமாக கற்றுக் கொண்டு இதனூடாகவும் அவர் இறைவனிடமிருந்து மக்களுக்கான நன்மைகள் வழங்குவதையும் நாம் உணர்ந்து அவரின் புனித நிலைமைக்கான முயற்சியை மேற்கொள்ளுவோம்.

ஆகவே அவரின் புனித நிலமைக்காக நாம் இறைவனை நோக்கி செபிப்போம். அவரின் புதுமைகள் வங்காலையில் மலர வேண்டும் என்றும் அனைவரும் செபிக்க வேண்டும். ஆகவே இன்றைய நாளில் அவருக்காக பரித்தியாகம் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார் ஆயர் அவர்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் மக்களுக்கான தியாகம் அவரிடம் குடிகொண்டிருந்தது - மன்னார் ஆயர்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House