
posted 25th January 2022
கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலையில் இருந்து இம்முறை ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் உயர்தர மாணவர் தினவிழா (ஏ.எல்.தின விழா) கல்லூரியின் நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாகவும் வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் கௌரவ அதிதியாகவும் கல்முனை தமிழ் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து விசேட அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களும் கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான பல மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் தமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை மாணவர்கள் பாராட்டி கௌரவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் விசேட அம்சங்களாக அமைந்திருந்தன. கல்லூரி மாணவர்களின் ஆற்றல், திறமைகளை வியந்து பாராட்டிய அதிதிகள் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.பிரபாகரன் உட்பட பிரதி அதிபர்கள், உயர்தர பிரிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்