
posted 9th January 2022
“வெளிநாட்டவர்கள் இலங்கையில் விவாகம் செய்து கொள்வது தொடர்பில் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றிக்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துங்கள்”, என்று நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வெளிநாட்டவர் மற்றும் இலங்கையர் இடையிலான விவாகத்தை பதிவுசெய்தல் எனும் தலைப்பிடப்பட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், “இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் 112ஆவது அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்ட நியதிகளை மாற்றத்திற்கு உட்படுத்தி, புதிய சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இளைஞர், யுவதிகள், தத்தம் பண்பாடு, கலாசார, மரபியல் அடையாளங்களை ஒத்தவர்களை திருமணம் செய்ய முடியாத அபாய நிலையே உருவாக்கப்படும்.
இந்த சுற்றறிக்கையின் மூலம், மாதாந்த வேதனமற்ற கௌரவ பதவியை உடைய கிராமிய விவாகப் பதிவாளர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான விவாகப் பதிவை மேற்கொள்ள முடியாதென தடைசெய்து, அதற்கான அதிகாரத்தை மேலதிக மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கியிருப்பது, அவர்களை அகௌரவப்படுத்தி, உளவியல் தாக்கங்களுக்கு உட்படுத்துவதாகவும், மாதாந்த வேதனமோ, நிலையான வருமானமோ அற்ற அவர்களுக்கு, விவாகப் பதிவின் போது வழங்கப்படும் சிறு வருமானத்தை இல்லாமற்செய்வதாகவும் அமைந்துள்ளது.
சமநேரத்தில், நிரந்தரமான மாத வேதனத்திற்கு உரித்துடைய அரச உத்தியோகத்தர்களான மேலதிக மாவட்டப் பதிவாளர்கள் பிறிதொருவழியில் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் சிங்கள மக்களின் திருமணச் சடங்குகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக இலங்கையில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழர்களையுமே பாதிப்பதாக அமைந்துள்ளது. ஆனால், தமிழர்களைப் பொறுத்தமட்டில் தனிமனித வாழ்வின் பிரதான அங்கமாக உள்ள திருமணம் என்பது மத, மொழி, கலாசார, பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படைக் கூறாக, அக்கூறுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அடையாளமாகவே காலம்காலமாக பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மேற்படி சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்’ என்ற விடயம், முகூர்த்த தினமொன்றில் குறிக்கப்பட்ட சுபநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்களைப் பதிவுசெய்ய முடியாத நிலைக்கு வழிகோலுவதோடு, தமிழர்களின் மத, பண்பாட்டு வரையறைகளில் பிறழ்வை ஏற்படுத்தும் வகையிலான நடைமுறைச் சிக்கல்களை மேலெழச் செய்வதாக உள்ளது.
ஏற்கனவே, பல்வேறு வழிகளிலும் வஞ்சிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இயல்பான வாழ்வில் தாக்கம் செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்து, இந்நடைமுறை மூலம் தமிழர்களும், கிராமிய விவாகப் பதிவாளர்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House