
posted 19th January 2022


(ஏ.எல்.எம்.சலீம் - தேனாரம் செய்தியாளர்)
நிந்தவூரின் முதலாவது ஊடகவியலாளர். ஓய்வுபெற்ற முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். அமீன் காலமானார்.
கிழக்கிலங்கையின் ஊடகத்துறையில் முன்னோடியான இவர் 1965 ஆம் ஆண்டு நிந்தவூரில் முதலாவது தமிழ் இனத்தை சேர்ந்த பட்டதாரி ஆகிய சகோதரி வள்ளியம்மையை தலைவராகக் கொண்ட நிந்தவூர் எழுத்தாளர் சங்கத்தின் உப தலைவராக இருந்து தமிழ் உலகுக்கு புகழ் சேர்க்கும் வகையில் இவ்வூரில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் தமிழ் இலக்கிய பெருவிழா ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் விழா சிறப்புற கால்கோளாக அப்போது சட்டத்தரணி எஸ் முத்துமீரான் இச் சங்கத்தின் செயலாளராக செயலாற்றி உள்ளார்.
1970-ஆம் ஆண்டு டாக்டர் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்தபோது, இஸ்லாமிய சோசலிச முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கினார். இதற்கான ஆரம்பக் கூட்டம் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் பாடசாலையிலேயே நடைபெற்றது. இது குறித்து அன்று தினபதி பத்திரிகையில் வெளியான 15 பக்கங்களைக் கொண்ட சிறப்பு மலருக்கு எச் எம் பி முகைதீன் ஆசிரியராக இருக்க, அவருக்கு உதவியாக இருந்த அல்ஹாஜ் ஏ எல் எம் அமீன் அவர்களை கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அந்த மேடையில் வைத்து வெகுவாக பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மேடையில் தான் மறைந்த பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம் அஷ்ரப் இஸ்லாமிய சோசலிசத்திற்கு எதிராக பேசியமையும் ஞாபகமூட்ட தக்க விடயமாகும்.
இவரது உடன்பிறப்புக்கள் ஆன மூத்த பத்திரிகையாளர் சாகித்திய சூரி கலாபூஷணம் ஏ எல் எம் சலீம், மற்றும் மறைந்த தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களுடன் இருந்து பல வருட காலம் பத்திரிகைத்துறையில் பெரும் பணியாற்றிய ஏ.எல்.எம். நயீம் போன்றவர்கள் ஊடகத்துறைக்கு தம்மை அர்ப்பணம் செய்து வருகின்றமை பத்திரிகைத்துறையில் இவரது குடும்பம் கொண்டுள்ள பாங்கை வெளிப்படுத்துகின்றனவாக அமைந்துள்ளது.
மேலும் நிந்தவூர் வெளவ்வாலோடை பிரதேசத்தில் மின்சார வசதியை பெறுவதற்காக மின்பிறப்பாக்கியினை பொருத்துவதற்கு இடமில்லாது திண்டாடியபோது அல் மினா வித்தியாலயத்தின் அளவில் ஒரு துண்டை கொடுத்து வெளவ்வாலோடை பிரதேசம் மின்னொளி பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் அல் ஹாஜ் ஏ.எல்.எம். அமீன் அவர்கள். நிந்தவூரில் குடிநீர் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான இடவசதி இல்லாத அப்போதைய பிரதேச செயலாளர் கஷ்டப்பட்ட வேளை, நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் இருந்து ஒரு துண்டு நிலத்தை ஒதுக்கி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சென்று அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்து பல மில்லியன் ரூபா பெறுமதியான நீர்த்தாங்கி நிர்மான வேலையை நிந்தவூருக்காக தக்கவைத்து பெருமை இவரையே சாரும்.
நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளராகவும், நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், நிந்தவூர் வர்த்தகர் சங்கத்தில் சுமார் 10 வருட காலம் செயலாளராக இருந்து போற்றத்தக்க பல பணிகளைச் செய்த செயல் வீரர் ஆவார்.
நிந்தவூரில் முதன் முதலாக அமீனியா ஸ்டோர்ஸ் எனும் பெயரில் புத்தகக் கடையை உருவாக்கியதும் இவருடைய தகப்பன் மர்ஹ_ம் அல்ஹாஜ் எஸ் பி ஆதம்லெப்பை ஆவார்.
நிந்தவூர் மற்றும் காரைதீவு ஆகிய கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அல்ஹாஜ் ஏ எல் எம் ஆமீன் இப்பிரதேச பாடசாலைகளது தேவைகளைப் பொறுத்தவரையில் அமைச்சர்கள் எம்பிக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நெருங்கிப்பழகி தேவையான வளங்களை பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்து உதாரண புருஷர் ஆவார்.
இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கல்முனை மாவட்ட கிளையின் செயலாளராக இருந்து 1989ம் ஆண்டு அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய வசதிகளுக்காக இவர் முன்னின்று நடாத்திய கருத்தரங்கின் மூலம் இந்த மாவட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் அப் பரீட்சையில் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வித் திணைக்களத்தின் கல்முனை மாவட்ட கடன் வழங்கு சபையின் உறுப்பினராக இருந்து அரும்பணி ஆற்றிய அல்லாஹ் ஏ எல் எம் அமீன், ஓர் நல்லாசிரியராக, சிறந்த அதிபராக, பொதுநல சமூக சேவையாளராக, சமூக எழுத்தாளராக, பத்திரிகையாளராக, சிறந்த மேடைப் பேச்சாளராக, பாடகராக, வர்ணனையாளராக, தொகுப்பாளராக, மொத்தத்தில் நல்ல உள்ளம் கொண்ட ஆளுமை பொருந்திய பெரு மனிதராக திகழ்ந்தார்.
இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இன்று பல முக்கிய உயர் பதவிகளில் சேவையாற்றுகின்றமை இவரது கல்விப் பணிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி அவர்களை மதித்து கலாசார அமைச்சினால் வழங்கப்படும் அதிஉயர் விருதான கலாபூஷண விருது வழங்கி 2016 ம் ஆண்டு கௌரவிக்கப்பட்ட ஏ.எல்.எம். அமீன், நிந்தவூர் பிரதேச குவாஷி நீதிபதியாகவும், நிந்தவூர் பிரதேச ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவராக இறுதி வரை செயலாற்றிய பெருந்தகை ஆவார்.
இவ்வாறு தனது பிரதேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்ட மறைந்தும் தன் புகழ் மறையாத மாமேதை அல்ஹாஜ் ஏ.எல்.எம் அமீன் அவர்கள் 2022.01.18 ல் இறையடி சேர்ந்துள்ளார்.
தேனாரம் செய்தியாளர்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House