800 வருட வரலாற்றைக் கொண்ட தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்ற உள்ள நடவடிக்கையை நிறுத்த வேண்டும் - முஸ்லிம் பேரவை

800 வருட கால வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தென்கிழக்கு முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் அலி சப்ரி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பவற்றுக்கும் அவசர மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையை மையப்படுத்தி பாரிய பௌத்த தாது கோபுரம், தர்ம மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பள்ளிவாசல் நிர்வாகம் இதனை உடனடியாக செய்ய முன்வரா விட்டால் அப்பள்ளிவாசலை பலாத்காரமாக அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்று சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதானியான தம்மரத்ன தேரர் எழுத்து மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என அறிய முடிகிறது.

கூரகல பிரதேசமானது பௌத்தர்களின் புனித பூமி என்பதுடன் தொல்பொருள் பிரதேசமுமாகும் என்று கூறியே அங்கு அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

கூரகல பிரதேசத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் விஜயம் செய்து, மேற்படி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டுச் சென்றதன் பின்னரே ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் வெசாக் தேசிய நிகழ்வை கூரகலையில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதற்கு முன்னதாக இப்பள்ளிவாசலை அகற்றி விட வேண்டும் என பேரினவாத செயற்பாட்டாளர்கள் விடாப்பிடியாக நிற்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இப்பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் புதிய அரசாங்கம் உருவான காலம் முதல் இவ்விடயத்தில் கடும் முனைப்புக் காட்டப்படுகிறது.

கடந்த 800 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் சியாரம் உள்ளிட்டவை சட்ட ரீதியானதாகும். ஆகையினால் இதனை சட்டத்துக்குப் புறம்பாக அகற்றவோ அழிக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது. இது முஸ்லிம்களின் தொன்மைமிகு புனிதஸ்தலமாகும். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம்கள் இப்பள்ளிவாசலுக்கு யாத்திரை சென்று தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கோ பௌத்த வழிபாடுகளுக்கோ இடையூறுகள் எவையுமின்றி, இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற இப்பள்ளிவாசலை இன, மத ஒடுக்குமுறை சிந்தனையின் பேரில் பலாத்காரமாக அகற்ற முற்படுவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்களின் தொன்மையை பறைசாற்றும் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றாமல் பாதுகாப்பதற்கு அனைத்து முஸ்லிம் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அமைப்புகளும் ஒருமித்து செயற்பட முன்வர வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். அவர்களுடன் எமது அரசியல் தலைமைகளே இது குறித்து பேச வேண்டும். இப்பள்ளிவாசலை பாதுகாக்கும் பொறுப்பினை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பார்த்துக் கொள்ளட்டும் என்று எவரும் ஒதுங்கி விட முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

800 வருட வரலாற்றைக் கொண்ட தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்ற உள்ள நடவடிக்கையை நிறுத்த வேண்டும் - முஸ்லிம் பேரவை

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House