24 வயது இளைஞர் படுகொலை - நீதிகேட்டு மரண ஊர்வலப் போராட்டம்

குற்றவாளிகளை கைது செய்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாரின் வாக்குறுதியை அடுத்து அந்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஏ-9 வீதியை மறித்து இடம்பெற்றது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி பரந்தன் வர்த்தகர்கள் நேற்று முழுகடையடைப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டதோடு, மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது.

தொடர்ந்து அந்தப் பகுதியில் ஏ-9 வீதியை மறித்து இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது ஏ-9 வீதிய ஊடான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தபோதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போக்குவரத்துக்காக மாற்று வழிகள் பொலிஸாரினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டபோதிலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது போனது.

இந்த நிலையில் பொலிஸ் உயரதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், குடும்பத்தினரிடமும் கலந்துரையாடினார். குற்றவாளிகளை கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அவர்களிடம் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

குறித்த விடயங்களை உள்ளடக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒப்பந்தத்துடன் கடிதம் ஒன்றும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது. அந்த விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கடிதம் ஒன்றைக் கையளித்தார்.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் ஏ-9 வீதியை மறித்து இடம்பெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

24 வயது இளைஞர் படுகொலை - நீதிகேட்டு மரண ஊர்வலப் போராட்டம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House