
posted 26th January 2022
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைப்பதற்காக பொது நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் 2021 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த சுற்று நிருபம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த சங்கம் மகஜர்களை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவிக்கையில்;
1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பொது நிருவாக அமைச்சின் சுற்றறிக்கை ஒன்றினால் ஏற்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்கும் பொருட்டு, சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் நிதி அமைச்சரின் பரிந்துரைக்கமைவாக தற்போது சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கை வெளியிடுகையில் 1997 முதல் 2021 டிசம்பர் வரையான 24 வருட காலப்பகுதியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அல்லது பதவி உயர்வு பெற்ற அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டு, அவர்களுக்கு எவ்வித நிவாரண ஏற்பாடுகளுமின்றி இச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமையானது பெரும் அநீதியாகும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபமானது அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக வழங்கப்படும் சம்பள உயர்ச்சிக்கானதல்ல. மாறாக, 1997 ஆம் ஆண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஒரு நிவாரணம், 24 வருடங்களுக்கு பின்னர் வழங்கப்படுகிறது என்பதை கல்வியமைச்சு மற்றும் பொது நிருவாக அமைச்சு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன், சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரிய கல்வி சார் தொழிற்சங்கங்களும் இதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டத் தவறி விட்டன.
பொதுவாகவே சம்பள உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடும்போது துறைசார் அமைச்சுக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தாமல் விடுவதும் பின்னர் போராட்டங்கள் இடம்பெறுவதும் இலங்கை அரச நிருவாகத்தில் வாடிக்கையானதொரு விடயமாகி விட்டது.
ஆகையினால் 1997 முதல் 2021 வரையான காலப்பகுதியில் அதிபர், ஆசிரியர்களாக அர்ப்பணிப்புடன் கடமையாற்றி, ஓய்வுபெற்றவர்களுக்கும் சட்டப்படி உரித்தான சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வகையில் குறித்த சுற்று நிருபத்தை திருத்தம் செய்து வெளியிடுமாறு அந்த மகஜர் மூலம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House