
posted 30th January 2022
கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா பெருந்தொற்று தாண்டவமாடிய காலப்பகுதியில் மக்களைப் பாதுகாப்பதில் பெரும்பங்காற்றிய அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அர்ப்பணிப்புமிக்க சேவை என்றும் போற்றத்தக்கதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு, ஒரு வருடம் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு சனிக்கிழமை (29) வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அஷ்ரப் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியசாலை சமூகத்திற்கான நற்சான்றிதழை முதல்வர் ஏ.எம். றகீப் வழங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது பிராந்தியத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் பெரும் பங்காற்றி, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக அஷ்ரப் வைத்தியசாலை ஆற்றிய பங்களிப்பை எவரும் மறந்து விட இயலாது. இவ்வைத்தியசாலை சமூகத்தினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலோடும் சாதுர்யமாகவும் தியாக மனப்பாங்குடன் அரும்பணியாற்றியிருக்கின்றனர். இந்த அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இப்பிராந்திய மக்கள் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில், கொரோனா தொற்று சுமார் 06 இலட்சத்தை தாண்டியிருக்கிறது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இவ்வாறு பெருந்தொகையான உயிர்களைக் காவு கொண்ட இக்கொரோனாவை, எமது நாட்டுக்கு தடுப்பூசி வருவதற்கு முன்னரான காலப்பகுதியிலேயே எமது பிராந்தியத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுகாதாரத்துறையினர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபைக்கும் முதல்வராகிய எனக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. அதன் நிமித்தம் நாங்களும் சுகாதாரத்துறையினருடன் கூட்டுப்பொறுப்போடு இணைந்து மிகச்சிறப்பாக செயற்பட்டிருந்தோம்.
இலங்கையில் கொவிட் தடுப்பூசி பாவனைக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்கின்ற நிலையில், தற்போது ஒமிக்ரோன் பிறழ்வு பரவலடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. எமது நாடும் உலகமும் தொடர்ச்சியாக இவ்வாறான சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. எவ்வாறாயினும், இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்கின்ற அளவுக்கு எமது நாட்டின் சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும், ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருவதானது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.
இந்நிகழ்வில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இவ்வைத்தியசாலையில் அர்ப்பணிப்பு, தியாகங்களுடன் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் வைத்திய அத்தியட்சகரினால் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்துடன், கொரோணா பெருந்தொற்று காரணமாக மரணித்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ், டாக்டர் ஏ.எல். பாரூக் ஆகியோர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்புக்கான வேலைத் திட்டங்கள் பற்றி விளக்கமளித்து உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House