
posted 28th January 2022
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிவரை தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பூஸ்டர்) வழங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசியை, இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து மூன்று மாத இடைவெளியின் பின் பெற்றுக்கொள்ளலாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கோவிட்-19 நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது தடுப்பூசியை காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். எனினும் கவலைக்கிடமான வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூன்றாவது மேலதிக தடுப்பூசியை (பூஸ்டர்) பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 30.59 வீதமானவர்கள் மட்டுமே தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) பெற்றுக்கொண்டுள்ளனர்.
தொற்று நோயியலாளர்களின் அறிக்கைகளின்படி கோவிட்-19 வைரஸின் காலத்துடன் ஏற்படும் டெல்டா, ஒமைக்ரோன் போன்ற திரிபுகளை தடுப்பதற்கும், இப்பெருந்தொற்று நிலவும் காலத்தினை குறைப்பதற்கும், கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் கடுமையான நோய்நிலையை தடுப்பதற்கும், மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்கும் தடுப்பூசிகளை உரியகாலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வின்படி இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் வினைத்திறனானது குறைவடையும் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வயதுவந்தவர்களுக்கு ஏனையோரைவிட இவ்வினைத்திறனானது சற்று அதிகமாகவே குறைவடையும் என்பதும் முக்கியமான விடயமாகும்.
எனவே, தற்போது ஏற்பட்டுவரும் கோவிட்-19 திரிபுகளை எதிர்கொள்ளவேண்டுமாயின் இம் மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். மக்கள் தொகையில் குறைந்தது 70 வீதமானோர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படாமல் தடுக்கமுடியும். அதன் மூலமே தடுப்பூசி போடுவதற்கு விருப்பமிருந்தும் உடல் நோய் நிலமைகளினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களையும் பாதுகாக்க முடியும்.
அவ்வாறு மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஏற்படப்போகும் கோவிட் பெருந்தொற்றினால் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் தொற்றுக்குள்ளாவதுடன் அதிக எண்ணிக்கையான உயிரிழப்புகளினையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
எனவே கோவிட் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு எமது உடலில் கோவிட்-19 தடுப்பூசியின் வினைத்திறனானது உயர்வாக காணப்பட வேண்டும். எனவே, காலத்துடன் குறைவடைந்து செல்லும் கோவிட்-19 தடுப்பூசியின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
மேலும் அண்மைக்காலமாக மீண்டும் நாடு முழுவதும், மற்றும் மாகாண ரீதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மருத்துவமனைகளில் கோவிட் தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்படபவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சையின்போது செயற்கை ஒட்சிசன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பெருந்தொற்று அபாயத்தின் அறிகுறிகளாகும்.
எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாள்களில், 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அதாவது 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பூஸ்டர்) வழங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசியினை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து மூன்று மாத இடைவெளியின் பின் பெற்றுக்கொள்ளலாம்.
இத்தடுப்பூசி வாரத்தின்போது தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் அறியத்தரப்படும். கோவிட்-19 இற்காக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு பெப்ரவரி 5 ஆம் திகதி சனிக்கிழமை தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான நிலமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House