
posted 24th January 2022
நீதியமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்து கொள்ளவுள்ளமையால் பொதுமக்கள் தமக்குத் தேவையான சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும் இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு,
தொழிலாளர் தீர்ப்பாயம், சமாதான நீதிவான், திடீர் மரண விசாரணை, சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளர், அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள் மூலம் தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகளை தீர்க்க முடியும்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக சேவை மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ளவும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும் முடியும்.
சட்ட உதவி ஆணைக்குழுவிடம் நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும், ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையைப் பெற்றுக் கொள்ளவுமான சேவைகளை பெறமுடியும்.
இழப்பீட்டுக்கான அலுவலகம் மூலம், புனர்வாழ்வு அதிகார சபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்து இழப்பு, இறப்பு, மற்றும் காயம், தொடர்பான கோவைகள், அரசாங்க ஊழியர் சொத்து இழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக் கொள்ளாதவர்களும் மேலதிகமாக இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். தவிர, சுயதொழில் திட்டப் பயிற்சி நெறிகள் தொடர்பான விவரங்களை இந்த நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் மூலமாக விழிப்புணர்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குற்றம் மற்றும் சாட்சியங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகார சபை ஊடாக குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்னைகள் அல்லது முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய அவர்கள் தமது பிரச்சனைகளை முன்வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களம் ஊடாக புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே, பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிய முடியும். அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அது தொடர்பான ஆலோசனைகளை பெறமுடியும்.
பதிவாளர் நாயகம் திணைக்களம் ஊடாக காலம் கடந்த பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமுகமளித்து சேவைகளையும் ஆலோசனைகளையும் பெறலாம்.
தவிர, சமூக சீர்திருத்த அலுவலகம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம், மத்தியஸ்தர் சபை, சிறைச்சாலைகள் திணைக்களம், சிறு தொழில் முயற்சி மற்றும் உள்ளூர் உற்பத்தி, தொழில் பயிற்சி அதிகார சபை, கடன் இணக்க சபை திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் ஆகிய திணைக்களங்களின் சேவைகளையும் இந்த நடமாடும் சேவையில் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House